×

குடியிருப்பு பகுதியில் புதிய கல்குவாரிக்கு கடும் எதிர்ப்பு சுடுகாட்டில் பொதுமக்கள் உண்ணாவிரதம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதை சுற்றியுள்ள அருங்குன்றம், மதூர், பினாயூர் ஆகிய கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகள் அருகே பல்வேறு கல்அரவை தொழிச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் பூமியில் இருந்து கற்களை பெயர்த்து எடுக்க சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வைக்கப்படுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் விடுகிறது. இதுமட்டுமின்றி கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமப்புற சாலைகளை பழுதாக்கி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துக்கள் நடந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.

மேலும் கல் அரவை தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையால் கிராம மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இதுமட்டும் இன்றி விவசாயிகள் பயிரிடும் பயிர்களில் இந்த புகை படிவதால் பயிர்கள் வளராமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு கனிமவளங்களை கொள்ளையடிப்பது மட்டும் இல்லாமல் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில் பழவேறி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் புதிதாக கல்குவாரி தொடங்கும் வகையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி சாலை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் குவாரி பணியும் தொடங்கப்பட்டுள்ளது. தகவலறிந்து பழவேறி கிராம மக்கள் விரைந்து வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து இந்த கிராமத்தில் குவாரி அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி குவாரிக்கு தடைவிதிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கல்குவாரி ஊழியர்கள் மீண்டும் மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் உத்திரமேரூர் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கல்குவாரிக்கு தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து கிராம மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பழவேறி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வீடுகளை புறக்கணித்துவிட்டு சுடுகாட்டில் தஞ்சமடைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் சுடுகாட்டில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது கல்குவாரியை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கவோ மாவட்ட நிர்வாகம் இதுவரை முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், பழவேறி கிராம மக்கள் 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை வஞ்சிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள குவாரிகளினால் சாலை வசதியின்றி குடிநீர் பற்றாக்குறை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் மலையடிவாரத்தில்  இந்த கல்குவாரி அமைந்தால் மலைகள் அழிக்கப்பட்டு கிராமமே அழிந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த கல்குவாரிக்கு கொடுத்துள்ள அனுமதியினை தடுத்து நிறுத்தாவிட்டால் சாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.


Tags : firestorm ,area ,protests , Public fasting , residential area, heavy protests, new fireworks, fireworks
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...