×

பர்சில் இருந்து பணத்தை எடுத்த தகராறு தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை: கன்னியாகுமரிக்கு தப்ப முயன்ற நண்பர் கைது

பூந்தமல்லி: தலையில் கல்லை போட்டு நண்பரை கொலை செய்து விட்டு, கன்னியாகுமரிக்கு தப்ப முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (24). இவர், தனது நண்பர்களான கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் (25), அரவிந்த், சுப்ரமணியன் ஆகியோருடன் சேர்ந்து மதுரவாயல், ஏரிக்கரை, முத்துமாரி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

முரளி, நண்பர் சிம்சனுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த சிம்சன் அருகில் இருந்த கல்லை எடுத்து முரளியின் தலையில் போட்டுள்ளார். இதில் தலையில் பலத்தகாயமடைந்த முரளி, அதே இடத்தில் இறந்தார். சிம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது முரளியை கொலை செய்து விட்டு, தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு பஸ்சில் சிம்சன் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்த  போலீசார்,  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சிம்சனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்சனின் மணி பர்சில் இருந்த பணத்தை முரளி எடுத்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக முரளியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Murder ,laborer ,dispute ,murderer ,wage worker , purse, money was taken, dispute, wage worker, murder
× RELATED தகராறில் எலக்ட்ரீஷியன் கொலை