×

சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த கழிப்பறை: மக்களுக்கு சுகாதார சீர்கேடு

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவில் உள்ள நவீன பொதுக்கழிப்பிடம் முறையான பராமரிப்பு இல்லாமல், பாழடைந்த நிலையில் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, அதன் அருகில் கல்வி பயிலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவில் செல்போன் மற்றும் கணினி உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரிச்சி தெருவுக்கு வந்து செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் மெட்ரோ வாட்டர் தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் இந்த கழிப்பிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் விட்டதால் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் சிரமம் அடைய தொடங்கினர். இதனால் இந்த கழிப்பிடம் தற்போது பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் கிடக்கிறது. மேலும் குழாய்கள் உடைந்த நிலையிலும், கழிப்பறை தொட்டிகள் சுகாதாரம் இல்லாமலும் மிகவும் அலங்கோலமாக கிடக்கிறது.

தற்போது கழிப்பிடத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதன் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளதால் இங்குள்ள குழந்தைகளுக்கு எந்த நேரமும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பாழடைந்து கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைக்கவும், முறையாக பராமரிக்க ஆட்களை நியமிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி குடிசைவாசிகள் கூறுகையில், ‘‘ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் இந்த கழிப்பிடத்தை சீரமைக்கவோ அல்லது முறையாக பராமரிக்கவோ மாநகராட்சிக்கு துளியும் விருப்பம் இல்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, இயற்கை உபாதை கழிக்கவும் முடியாமல் நாங்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றோம். ஏற்கனவே எங்களை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரட்ட அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது நாங்கள் ஏதாவது கேட்டால், வீடுகளை காலி செய்ய சொல்வார்கள். இதனால், நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் எதையும் கேட்பது இல்லை’’ என்றனர்.


Tags : Richmond Street Dilapidated ,Sindathiripettai ,Richie Street , Dilapidated toilet , Sindathiripettai, Richie Street, without maintenance
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...