லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு 33.56 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு 33.56 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் (29). இவர், கடந்த 2014ம் ஆண்டு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே சாலைவிதிகளை மீறி, லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற அரவிந்த் ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைதொடர்ந்து மகனின் இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி அவரது பெற்றோர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி உமா மகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த அரவிந்த் ராஜ் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்ததும், அதன் மூலம் மாதம் 30 ஆயிரம் வருமானம் வந்ததும், மேலும், பிரேத பரிசோதனையில் வயது 29 என்பது உறுதி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இவரது இழப்பு பெற்றோருக்கு பேரிழப்பாகும், எனவே இன்சூரன்ஸ் நிறுவனம் உயிரிழந்த அரவிந்த் ராஜ் பெற்றோருக்கு 33 லட்சத்து 56 ஆயிரத்து 600 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: