விமான நிலையத்தில் இருந்து நேபாள முதியவர் திடீர் மாயம்: கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாள முதியவர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். நேபாள நாட்டை சேர்ந்தவர் பட்டிராஜ் கவுரா (60). இவர், தனது மகன் சிக்கேந்திர சவுத்திரி (26), மகள் கிருபகுமாரி தாசு (17) ஆகியோருடன் நேபாள நாட்டில் இருந்து சாலை வழியாக இந்தியாவுக்கு வந்து, பீகார் மாநிலம் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, இவர்கள் அனைவரும் கடந்த 13ம் தேதி இரவு 8 மணிக்கு பாட்னாவில் இருந்து தனியார் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். விமானத்தை விட்டு இறங்கிய மூவரும், விமான நிலையத்தில் உள்ள சிற்றுண்டியில் தேநீர் அருந்தினர். அப்போது திடீரென பட்டிராஜ் கவுரா மாயமானார். மகனும், மகளும் அவரை விமான நிலையம் முழுவதும் தேடினர். ஆனால், எங்கும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்து.

இதனால், அதிர்ச்சியடைந்த மகனும், மகளும் சென்னை விமான நிலைய போலீசில் வாய் மொழியாக புகார் அளித்தனர். போலீசார் சவுத்திரியிடம் நீங்கள் எதற்காக சென்னை வந்தீர்கள் என கேட்டனர். அதற்கு கிருபகுமாரி தாசுவை தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதற்காக தந்தையை அழைத்து சென்னை வந்ததாக கூறினார். அப்போது அவரிடம், அப்பாவுக்கும், உங்களுக்கும் பிரச்சனை அல்லது கருத்துவேறுபாடு ஏற்பட்டதா என்று கேட்டனர். மேலும் ஒருவேலை உங்கள் அப்பா தவறுதலாக வெளியில் சென்றிருக்கலாம். சென்னையில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் யாராவது இருந்தால் விசாரித்துப் பாருங்கள் என்று கூறினர். மறுநாள் இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று காலை மீண்டும் சென்னை விமான நிலையம் வந்த சவுத்திரி மற்றும் அவரது சகோதரி விமான நிலைய போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர். இதையடுத்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பட்டிராஜ் கவுராவை தேடி வருகின்றனர். பட்டிராஜ் கவுராவுக்கு நேபாள், இந்தி ஆகிய இரண்டும் மொழிகள் மட்டுமே தெரியும். ஆங்கிலம், தமிழ் தெரியாது. மர்ம ஆசாமிகள் முதியவரை கடத்தியிருக்கலாம். ஆனால் பட்டிராஜ் கவுரா எதற்காக கடத்தப்பட்டார்? கடத்தலுக்கான என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார விசாரிக்கின்றனர்.

Related Stories: