×

டாக்டர், எலக்ட்ரீஷியன் வீடுகளை உடைத்து 72 சவரன் நகை, 80 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

திருவொற்றியூர்.:  திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (53). இவரது மனைவி கவுரி. மணிவண்ணன் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் எலக்ட்ரீஷியனாக  வேலை செய்து வருகிறார்.  நேற்று முன்தினம்  பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கவுரி சென்று விட்டார். மணிவண்ணன் மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி என்பதால் வீட்டை பூட்டி விட்டு பணிக்குச் சென்ற மணிவண்ணன், நேற்று காலை  வீட்டுக்கு வராமல் அப்படியே சரஸ்வதி நகர் 12வது தெருவில் உள்ள அவரது உறவினர் செல்வராஜ் என்பவரது  வீட்டிற்கு சென்று  சாப்பிட்டுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கபட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தர்.  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 50 சவரன்  நகை மற்றும் 30 ஆயிரம்,  கால் கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

மணிவண்ணன் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்ட மர்மநபர்கள் யாரோ வீட்டிற்குள் புகுந்து  நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை வந்து சோதனையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.  கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வேளச்சேரி: அடையாறு இந்திரா  நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50), மருத்துவர். கடந்த 2 தினங்களுக்கு முன் கரூரில் வசித்து வந்த இவரது  மாமியார் இறந்து விட்டதால், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு கரூர்  சென்றார். அங்கிருந்து நேற்று வீட்டிற்கு திரும்பி வந்தார்.  அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 22 சவரன் நகை, ₹50 ஆயிரம்  கொள்ளை போனது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக அடையாறு காவல் நிலையத்துக்கு தகவல்  தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன்  சென்று கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு  செய்து அந்தப் பகுதியில், உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம  நபர்களை தேடி வருகின்றனர்.


Tags : Doctor ,home ,robbery ,persons ,electrician homes , Doctor, electrician homes, broken , 72 shaving jewelry, 80 thousand robbery
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...