தாம்பரம் அருகே சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகள்

தாம்பரம்,: தாம்பரம் - திருநீர்மலை சாலையில் திருநீர்மலை, அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு என தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வண்டலூர் - மீஞ்சூர் பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் பர்மா காலனி பகுதியில் கடப்பேரி  மலையோரம் சாலையின் நடுவே 20க்கும் மேற்பட்ட குதிரைகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன.

இரவு நேரத்தில் இந்த சாலையில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் சாலையில் படுத்துள்ள குதிரைகள் தெரியாமல், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுபற்றி வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் - திருநீர்மலை சாலையில் சிலர் தங்களின் குதிரைகளை சாலைகளில் அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். இந்த குதிரைகள் சாலையில் சுற்றித் திரியும் போது வாகனங்கள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளின் உரிமையாளர்களை கண்டித்து, சாலையில் இதுபோல குதிரைகளை மீண்டும் விடாமல் இருக்கும்படி உத்தரவிட வேண்டும். அதே போல சாலையில் மின் விளக்குகள் அமைத்து விபத்துக்கள் மற்றும் சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: