பள்ளியில் பேனாவுக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்தது: 8ம் வகுப்பு மாணவியை இரும்பு தடியால் 19 முறை அடித்து கொன்ற 10 வயது சிறுமி: ராஜஸ்தானில் பயங்கரம்

ஜெய்ப்பூர்: பேனா பிரச்னைக்காக 8ம் வகுப்பு மாணவியை 10 வயது மாணவி இரும்பு தடியால் 19 முறை கொடூரமாக அடித்து கொன்று, உடலை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சினிமா வன்முறை காட்சிகள், ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்களில் பரவி வரும் கலாச்சார சீரழிவுகள் போன்றவை சிறுவர்களின் மனதிலும் நஞ்சை விதைத்துள்ளன. வன்முறை, வக்கிரம் போன்ற குணங்களால் அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களும் சமீப காலமாக அதிகளவில் நடந்து வருகின்றன. இதற்கு உதாரணமான ஒரு சம்பவம்தான் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே உள்ள பட்லி கிராமத்தில் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்த சிறுமி பப்பு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். அப்போது, அந்த வகுப்பறைக்குள் அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் கலா (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி வேகமாக வந்தாள். பப்பு வைத்திருந்த பேனாவை வெடுக்கென்று பிடுங்கினாள். ‘என் பேனாவை திருடி வந்து விட்டாயா?’ என்று சத்தம் போட்டாள். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சண்டை போட்டுக் கொண்டனர். சக மாணவிகள் அவர்களை விலக்கி விட்டனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பப்பு, சீருடையை மாற்றிக் கொண்டு, கலாவின் வீட்டுக்கு சென்றாள்.  அங்கு, 2 பேருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. ஆத்திரமடைந்த கலா, தனது வீட்டில் இருந்த இரும்பு தடியை எடுத்து பப்புவை தாக்கினாள். அதில் காயமடைந்த பப்பு, ‘இரு... இரு.. போலீசில் உன் மீது புகார் தருகிறேன்...’ என்று வலியால் துடித்தப்படி சொன்னாள். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கலா, இரும்பு தடியால் பப்புவை சரமாரியாக தாக்கத் தொடங்கினாள்.

இதில், பப்பு ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினாள். இருப்பினும், கலா விடாமல் தாக்கியதில் பப்பு அதே இடத்தில் துடிதுடித்து இறந்தாள். ஆத்திரம் தீர்ந்ததும் பயந்து போன கலா, பப்புவின் உடலை மூடி வைத்தாள். வேலைக்கு சென்றிருந்த தனது தாய் வந்ததும், நடந்த சம்பவத்தை கூறினாள். சற்று நேரத்தில் தந்தையும் வந்தார். மூன்று பேரும் சேர்ந்து, சடலத்தை சிறிது தூரத்தில் உள்ள புதர் பகுதியில் புதைத்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்து விட்டனர். தனது மகள் காணாமல் போனதால் கவலை அடைந்த பப்புவின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், பள்ளியில் பப்புவுக்கும் கலாவுக்கும் இடையே சண்டை நடந்ததும், கலாவின் வீட்டுக்கு பப்பு சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கலாவிடம் போலீசார் மிரட்டி விசாரணை நடத்தியதும் உண்மைகளை எல்லாம் போட்டு உடைத்தாள். இதையடுத்து, கலாவையும் அவருடைய பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர். சாதாரண பேனா பிரச்னைக்காக 10 வயது சிறுமி கொலை செய்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>