மோடி-ஜின்பிங் இடையே நடந்த மாமல்லபுரம் சந்திப்பு பலன்கள் தெரிகின்றன: சீன தூதர் பேட்டி

புதுடெல்லி: ‘பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடந்த 2வது அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையின் நேர்மறையான பலன்கள் படிப்படியாக தெரிகின்றன,’ என இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்க் கூறி உள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு (ஆர்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா தெரிவிக்கும் கவலைகளுக்கு சீனா மதிப்பளிக்கிறது. அமைப்பின் அனைத்து நாடுகளுடன் ஆலோசித்து இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. அமைதியான, நிலையான சூழல் இல்லாமல் வளர்ச்சி காண முடியாது என்பதே சீனாவின் நிலைப்பாடாகும். கடந்த அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த மோடி-ஜின்பிங் இடையேயான 2வது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பின் நேர்மறையான வெளிப்பாடுகள் படிப்படியாக தெரிகின்றன.இவ்வாறு அவர் கூறினார். இந்தியா, சீனா இடையேயான சுமார் 3,500 கிமீ எல்லையில் இரு தரப்பு ராணுவத்தின் இடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாக ராணுவ தரப்பு தகவல்களும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: