குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பயங்கர கலவரம்: பேருந்துகள், தீயணைப்பு வாகனம் எரிப்பு

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் சிறிது தணிந்த நிலையில், டெல்லியில் நேற்று கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் -போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. பேருந்துகள், தீயணைப்பு வாகனத்துக்கு தீ ைவக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது மேற்கு வங்கத்திலும் தீவிரமாகி வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த போராட்டத்தில், 2 ரயில் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. 3வது நாளாக நேற்றும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கனாஸ், நாடியா மாவட்டம் மற்றும் ஹவுராவில் மக்கள் சாலைகளை மறித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டம் தீவிரமாகி வருவதை தொடர்ந்து, மால்டா, முர்ஷிதாபாத், ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் நேற்று முதல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.  அசாமில் நடந்த போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நிலைமை சீராகி வருகிறது. இதனால், அங்கு ஒரு சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. கவுகாத்தியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், திருப்ருகர், நகர்கடியா, டெனுகாட் பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

Advertising
Advertising

 போராட்டங்கள் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள், சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களின் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திஸ்பூர், உசான் பசார், சந்த்மாரி, சில்புக்குரி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்களின் கூட்டம் நேற்று நிரம்பி வழிந்தது. பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டு இருந்தன. எனினும், சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக பூடான் செல்லும் விமானம் உட்பட 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மேகாலயாவில் ஷில்லாங்கின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் எஸ்எம்எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தென்கிழக்கு டெல்லியில் ஜமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியோடு,  கூட்டத்தை கலைக்க  கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதன் காரணமாக  போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நியூ ப்ரென்ட் காலனி பகுதியில் டெல்லி அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதோடு, தீயணைப்பு வாகனத்துக்கும் தீ வைத்தனர். இதில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர் இருவர் காயமடைந்தனர். வன்முறை காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றும் மூடப்பட்டது. அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் தான் வன்முறை வெடித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். போராட்டத்தை கைவிடும்படியும், வன்முறையை ஏற்க முடியாது என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

மாணவர் அமைப்புகள் புதிய கட்சி தொடக்கம்?

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முதலில் போராட்டத்தை தொடங்கியது அசாம் மாணவர் அமைப்புக்கள்தான். ஆளும் பாஜ, அசாம் கன பரிஷத் மற்றும் காங்கிரஸ் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, இக்கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சியை தொடங்க இந்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மே.வங்க நிலைமை கேட்டறிந்த பிரதமர்

மேற்கு வங்க மாநில பாஜ பொதுச் செயலாளர் பிஸ்வபிரியா ராய் சவுத்ரி தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் ேமாடியை நேற்று சந்தித்தது. ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக மோடி செல்லும் வழியில், பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஆன்டாள் விமான நிலையத்தில் இக்குழு அவரை சந்தித்தது. இது குறித்து சவுத்ரி கூறுகையில், “கடந்த 3 நாட்களாக மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை, கலவரம் குறித்து பிரதமரிடம் தெரிவித்தோம். சூழ்நிலையை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும் அவரிடம் கூறினோம்” என்றார்.

Related Stories: