நாகர்கோவிலில் இந்து முறைப்படி நடந்தது அமெரிக்க மணமகனுக்கு இந்திய மணமகளுடன் திருமணம்

ஆரல்வாய்மொழி: நாகர்கோவிலில் அமெரிக்க மணமகனுக்கு இந்திய மணப்பெண்ணுடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

 குமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யாவுப்பிள்ளை. சுமார் 40 ஆண்டுக்கு  முன்பு அமெரிக்கா சென்ற அய்யாவுப்பிள்ளை  திருமணத்திற்கு பின்பு தன் மனைவி  பத்மாபிள்ளையுடன்  அமெரிக்கா குடியுரிமை பெற்றுஅங்கு சூப்பர் மார்க்கெட்  நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஷாண்பிள்ளை என்ற மகனும், சபரினாபிள்ளை என்ற  மகளும் உள்ளனர். சபரினாபிள்ளை அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார்.

 இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த  ஆலென்மோலர் மற்றும் செரில்மோலர் தம்பதியின் மகன் கயல் மார்ஸல்  மோலர் அமெரிக்காவில்  பணிபுரிந்து வருகிறார். இவர் சபரினா பிள்ளைக்கு  டாக்டர் பட்டத்திற்கான ஆசிரியராக இருந்துள்ளார். இதனிடையே  சபரினாபிள்ளைக்கும், கயல் மார்ஸல் மோலர்க்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் தாங்கள் காதலிப்பதை  தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இருவரின் பெற்றோர்களும் கலந்து பேசி  இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அய்யாவுப்பிள்ளை, தனது  உறவினர்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளதால்  திருமணத்தை இங்கு வைத்து இந்து முறைப்படி  நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உறவினர்களுடன் கலந்துபேசி   திருமணம் செய்ய முடிவெடுத்தனர். நிச்சயதாம்பூலம்,  மாங்கல்ய பொன் உருக்குதல் நிகழ்ச்சிகள் இந்து முறைப்படி  நடைபெற்றது. இந்நிலையில் இவர்களின் திருமணம் நேற்று காலை நாகர்கோவிலில்  உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இந்து முறைப்படி மணமகனின் பெற்றோர் அனைத்து நிகழ்ச்சியினையும் ஆர்வமுடன் செய்தனர். மேலும் மணமகன் மணமகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும், மணமகளுக்கு  மெட்டி அணியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மணமகனின் சகோதரியும்  கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்ட உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: