மார்த்தாண்டத்தில் அதிகாலையில் நடந்த துணிகர சம்பவம் நகைக்கடையில் புகுந்து 140 பவுன் கொள்ளை: பக்கத்து வீட்டில் பதுங்கியிருந்து கைவரிசை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நேற்று அதிகாலை நகைக்கடையில் புகுந்து 140 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மார்த்தாண்டம்  பழைய தியேட்டர் சந்திப்பில் தனியார் நகைக்கடை  செயல்பட்டு வருகிறது. தக்கலையை சேர்ந்த ஜாண்  கிறிஸ்டோபர் (46) என்பவர் இந்த ஜூவல்லரியை  நடத்தி வருகிறார். ஜூவல்லரியின் பின் பகுதியில் அவரது வீடு உள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும்  புத்தாண்டு பண்டிகையையொட்டி புதுப்புது  டிசைன்களில் நகைகளை வாங்கி வைத்திருந்தார். நேற்றுமுன்தினம் இரவு குடும்பத்துடன் ஜூவல்லரியையொட்டி உள்ள தனது வீட்டில் தூங்கி இருக்கிறார். அதிகாலை  சுமார் 5 மணியளவில் கடை உரிமையாளரின் மனைவி சாந்தி எழுந்து பின்பக்க கதவை திறந்து வெளியே உள்ள கழிவறைக்கு சென்றார். அந்த சமயம், கொள்ளையன் வீட்டில் புகுந்து நகைக்கடை கதவை திறந்துள்ளார். பின்னர் சாவகாசமாக அமர்ந்து கடையில் இருந்த 170 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். அப்போது ஆள் நடமாட்டத்தை உணர்ந்த கிறிஸ்டோபர் கண்விழித்து யார் எனக்கேட்டுள்ளார். யாரும் இல்லை என பதிலளித்தபடி கொள்ளையன் வீட்டில் இருந்து நகைகளுடன் வெளியே வந்துள்ளார்.

 அதே நேரம் கிறிஸ்டோபர் மனைவியும் பாத்ரூமில் இருந்து வெளியே வந்துள்ளார். எதிரே மர்மநபரை பார்த்ததும் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே கொள்ளையன் நகைகளுடன் சுவர் ஏறிக்குதித்து தப்பிச் சென்றார். மொத்தம் 170 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி இருக்கிறார். இதில்  காம்பவுண்ட் சுவர் ஏறி குதிக்கும் போது சுமார் 30 பவுன் அடங்கிய வளையல்கள் இருந்த ட்ரே கீழே விழுந்துள்ளது. அவற்றை கிறிஸ்டோபர், அவரது மனைவி  ஆகியோர் கண்டெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம்  போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின், போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வந்து, தடயங்களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து, கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4.45 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஐயப்பன் கதவை திறந்துவெளியே வருகிறார். பின்னர் டீ குடிப்பதற்காக நடந்து செல்கிறார். சற்று நேரத்தில் ஐயப்பன் வீட்டில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்மநபர் வெளியே வந்து பார்க்கிறார். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் சென்ற அவர் 4.55மணியளவில் மீண்டும் வெளியே வந்து அருகில் உள்ள வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதிக்கிறார். சற்று நேரத்தில் கிறிஸ்டோபர் மனைவி பின்கதவை திறந்து வெளியேவந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம ஆசாமி நகைக்கடையில் புகுந்தார்.

நகைக்கடையில் நுழைந்த அவர் எந்த பதற்றமும் இன்றி டிரேக்களை உருவி நகைகளை எடுத்து பேன்ட்ஸ் பாக்கெட்டில் சொருகுகிறார். பின்னர் 2 ட்ரேக்களில் வளையல்களை அடுக்கி வைத்து எடுத்துக்கொண்டு வெளியேறி தப்பிச்செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜூவல்லரிக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த ஒருவரை போலீசார் பிடித்து  விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம்  குறித்து போலீசார் கூறுகையில், நன்கு தெரிந்த நபர்தான் திட்டமிட்டு கைவரிசை  காட்டி சென்றிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பதிவு உள்பட  தடயங்களை வைத்து திருடனை விரைந்து பிடித்து விடலாம் என்று தெரிவித்தனர்.

Related Stories: