அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை அரசு கண்காணிக்கிறது

கோவில்பட்டி: ‘‘ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், ஏலத்தில் மூலம் பதவி விடப்பட்டால் அது செல்லாது என தேர்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இது கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று, நிருபர்களிடம் அமைச்சர் ராஜு கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் எந்தவித குளறுபடியும் இல்லை. நீதிமன்றம் வார்டுகள் மறுவரையறை செய்து தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதன்பின்னர் தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி நிர்வாகமும் வார்டு மறுவரையறை செய்து, பட்டியல் தயாரித்தது. அதனை மாநில தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் நடத்த தடையில்லை என தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உறுப்பினர் பதவியில் இருந்து தலைவர் பதவி வரை பொதுவார்டு, பெண்கள் வார்டு, தாழ்த்தப்பட்டோருக்கான வார்டுகள் என பட்டியல் தயாரித்து வெளிப்படையாக வெளியிடப்பட்டு உள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், ஏலத்தில் மூலம் பதவி விடப்பட்டால் அது செல்லாது. அதற்கு துணை போகக்கூடாது என தேர்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஜ, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நாளை (இன்று) வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்குள் இறுதிவடிவம் பெற்று, அதே கூட்டணியோடு நாங்கள் போட்டியிடுவோம். இவ்வாறு ராஜு தெரிவித்தார்.

Related Stories: