×

தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்த போர்க்கப்பலை பார்வையிட திடீர் அனுமதி மறுப்பு: ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

தூத்துக்குடி: ஆண்டுதோறும் டிச.4ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கடற்படை வார விழாவையொட்டி தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் பி.58 சுமேதா என்ற இந்திய கடற்படை போர்க்கப்பலை வந்தது. இதனை பார்வையிட  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஆயிரக்ணக்கணக்கான மாணவ, மாணவிகள், தங்களது ஆசிரியர்களுடன் வந்து போர்க்கப்பலை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.  இதைத்தொடர்ந்து நேற்று இலவசமாக பார்வையிடலாம் என கடற்படை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் அதிகாலை முதலே பொதுமக்கள் கார்கள், வேன்கள், டூவீலர்கள் என பல்வேறு வாகனங்களில் குடும்பத்தினருடன் துறைமுக கிரீன் கேட் முன்பாக குவியத்துவங்கினர். இவர்களை கடற்படையினர் பெயர், அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு அனுமதித்தனர். ஆனால், நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது.

 உள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதன் காரணமாக, திக்குமுக்காடிய கடற்படையினர், பெருமளவில் திரண்டுவந்த பொதுமக்களை அழைத்துச்செல்ல மறுத்துவிட்டனர். அதிக தூரத்தில் இருந்து போர்க்கப்பலை பார்க்கும் ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் தங்களை அனுமதிக்காததால் ஆத்திரமடைந்து கடற்படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினரும், தெர்மல் நகர் போலீசாரும் பொதுமக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகும் சில மணி நேரங்கள் காத்திருந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : Vauxi Port: Thousands ,Tuticorin ,home , Thousands return,home ,disappointment
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...