×

2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் பாஸ்டேக்கால் ஸ்தம்பித்தது கப்பலூர் டோல்கேட்:

* நெரிசலில் சிக்கி பொதுமக்கள் திண்டாட்டம்
* பாதையை மறித்து ஆம்னி பஸ்கள் போராட்டம்

திருமங்கலம்:  நாடு முழுவதும் டோல்கேட்டுகளில் பாஸ்டேக் எனப்படும் மின்னணு கட்டண முறை நேற்று (டிச. 15) முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது. அதன்படி டோல்கேட்களில், பாஸ்டேக் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.  மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் டோல்கேட்டில் உள்ள 10 கவுன்ட்டர்களில் முதல்  மற்றும் 10வது கவுன்ட்டர் மட்டுமே பணம் கட்டிச் செல்லும் கவுன்ட்டர்களாக மாற்றப்பட்டன. மீதமுள்ள 2 முதல் 9 கவுன்ட்டர்கள் பாஸ்டேக் கவுன்ட்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லை சென்ற ஆம்னி பஸ், பாஸ்டேக் கவுன்ட்டர் வழியாக சென்றது. அப்போது, அங்கிருந்த ஸ்கேனர் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் அரை மணிநேரம் பஸ் நிறுத்தப்பட்டதால் பஸ் ஊழியர்கள், டோல்கேட் ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த ஆம்னி டிரைவர்களும் டோல்கேட் பாதைகளை மறைத்து ஆங்காங்கே பஸ்களை நிறுத்தினர். இதனால், எந்த வாகனங்களும் டோல்கேட்டை கடக்க முடியவில்லை. தகவலறிந்து திருமங்கலம் போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

இதையடுத்து, டோல்கேட் ஊழியர்கள் அனைத்து கவுன்ட்டர்களையும் திறந்து விடவே சுமார் 30 நிமிடங்கள் அனைத்து வாகனங்களும் இலவசமாக கட்டணமின்றி சென்றன. ஆனால், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்ததால், டோல்கேட் ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் மறித்தனர். பாஸ்டேக் ஸ்டிக்கர் எடுத்தவர்களால்கூட பாஸ்டேக் கவுன்ட்டர் வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் அந்தப்பகுதியே பரபரப்பானது. இந்த பரபரப்பான சூழலில், போலீசார் விரைந்து வந்து, நெரிசலை சரி செய்தனர். இதனிடையே, 40 சதவீதம் பேர் பாஸ்டேக்கை பெறவில்லை என்பதால், ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்பின், காலை 10 மணிக்கு கப்பலூர் டோல்கேட்டில் அனைத்து கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டன. இதையடுத்து, நெரிசல் குறைந்து சகஜ நிலைக்கு டோல்கேட் பகுதி திரும்பியது.

Tags : VEHICLED ,Pastcake , 2 km Fast-Traffic,Vehicles,Stopped , Pastcake
× RELATED பாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி...