ராஜஸ்தான் போலீஸ் அதிரடி நேரு குடும்பம் பற்றி அவதூறு பிரபல நடிகை பாயல் கைது: குஜராத்துக்கு வந்து தூக்கிச் சென்றது

அகமதாபாத்: நேரு குடும்பத்தை பற்றி அவதூறு கருத்துக்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோத்தகியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் வசித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோத்தகி, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர், காங்கிரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 6 மற்றும் 21ம் தேதிகளில், பாயல் தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக பாயல் மீது, ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சர்மேஷ் ரமேஷ் போலீசில் புகார் செய்தார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபரில் வழக்கு பதிவு செய்த ராஜஸ்தான் போலீசார், நடிகை பாயலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில், ராஜஸ்தான் போலீசார் நேற்று அகமதாபாத் சென்று பாயலை பிடித்து, ராஜஸ்தானின் பந்தி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இது குறித்து பாயல் தனது டிவிட்டர் பதிவில், ‘கூகுளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நான் வெளியிட்ட வீடியோவுக்காக ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளேன். பேச்சு சுதந்திரம் கேலிக் கூத்தாகி உள்ளது,’ என கூறியுள்ளார். பந்தி எஸ்பி மம்தா குப்தா கூறுகையில், ‘‘பாயலை முறைப்படி இன்னும் கைது செய்யவில்லை விசாரிக்க அழைத்து வந்துள்ளோம்,’’ என்றார்.

Related Stories: