தமிழகத்தில் 44 செமீ மழை பெய்துள்ளது: இன்றும் மழை பெய்யும்

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய 44 செ.மீட்டர் அளவு மழை நேற்று வரை பெய்துள்ளது. இனிமேல் மழை பெய்தால் அது தமிழகத்துக்கு போனஸ் மழையாக இருக்கும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. ஏறத்தாழ 4 மாதங்கள் பெய்ய வேண்டிய பருவமழை, இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு புயல்கள் ஏதும் வங்கக் கடலில் உருவாகவில்லை. இருப்பினும், காற்றழுத்தம், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்தாலும் இந்த காலத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவான 44 செ.மீட்டர் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியும் உள்ளன.

கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் பெய்த மழையில், சென்னையில் 516 மிமீ பெய்ய வேண்டும். ஆனால், 499 மிமீ வரை மழை பெய்துள்ளது. அதிகபட்ச மழை என்று பார்க்கப்போனால், நாகப்பட்டினத்தில் இயல்பாக 827 மிமீ பெய்ய வேண்டும். ஆனால், நேற்று வரை 927 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 12 மிமீ கூடுதல். அதேபோல காரைக்காலில் 908 மிமீ பெய்ய வேண்டிய நிலையில், நேற்று வரை 891 மிமீ மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலத்தில் 440 மிமீ மழை பெய்ய வேண்டும். நேற்று வரை அந்த இயல்பு அளவை எட்டியுள்ளது.

இதன்படி பார்த்தால், கோவையில் 35%, ஈரோடு 13, நீலகிரி 74, ராமநாதபுரம் 60, சிவகங்கை 27, திருநெல்வேலி 52, தூத்துக்குடி 36 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 13 சதவீதம் குறைவாகவும், திருவண்ணாமலையில் 20 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கேரளா, தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Related Stories: