சென்னை மண்டலத்தில் தனியார் ஆக்கிரமித்துள்ள 2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்பதில் பின்னடைவு

* காற்றில் பறந்த கமிஷனர் உத்தரவு

* அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியதா?

சென்னை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம், கட்டிடம், காலி மனைகள் உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அந்தெந்த கோயில் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது. ஆனால் அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான விவரங்கள் இல்லையாம். இதை பயன்படுத்தி கொண்டு கோயில் அலுவலர்கள் சிலர் தனியாருடன் கை கோர்த்து கொண்டு கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு புகார் வந்த நிலையில் அது கோயில் நிலம் தான் என்பது தொடர்பான ஆவணங்கள் அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் சொத்துக்களை மீட்கும் வகையில் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள், விஏஓக்கள், கோயில் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் சென்னை மண்டலம் முழுவதும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை மண்டலத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலங்கள் தற்போது தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்த குழுவினர் அறநிலையத்துறைக்கு அறிக்கை சமர்பித்துள்ளனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை கையகப்படுத்த கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது ஒரு சில கோயில்களில் ஆக்கிரமிப்பு நிலங்களை தங்கள் வசப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ெபரும்பாலான கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனியார் பெயரில் பத்திரம் பதிவு செய்து, பட்டா மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானவை என்பது தொடர்பாக வருவாய்த்துறை ஆவணங்கள் உள்ளது. ஆனால், அந்த கோயில்களில் சொத்துக்களை மீட்காமல் கோயில் அலுவலர்கள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், கோயில் நிலங்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு, உயர் அதிகாரிக்கு பல கோடி பணம் கைமாறியதாக தெரிகிறது.இந்த விவகாரம் தொடர்பாக, கமிஷனருக்கு புகார் வந்தும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள கோயில் நிலங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: