மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் பாஜவுக்கு மக்கள் மரணஅடி கொடுப்பார்கள்: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் பாஜவுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள் என்று தலைவர்கள் கூறியுள்ளனர்.நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்): குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜ அரசு கொண்டுவந்து, நாட்டை மதரீதியாக பிரிக்கும் சதிச்செயலை அரங்கேற்றி வருகிறது. இந்த சட்டத்திருத்தம் வட மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

மத அடையாளத்தின் அடிப்படையில் மக்களை ஒதுக்கி வைக்கும் அல்லது சேர்க்கும் ஒரு நாடாக இந்தியாவை உருவாக்கிய தலைவர்கள் கற்பனைகூட செய்யவில்லை. அரசின் இம்முயற்சி இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் உயிர்நாடியான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை தகர்ப்பதாக அமையும். முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): இந்திய ஜனநாயகத்தின்  கட்டமைப்பை சீர்குலைக்கும் செயலை தொடர்ந்து செய்து வரும் பாஜவினர் செயல்  அனைத்து தரப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜ  அரசின் செயலை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.  நாட்டில் பல துறைகளில் தோல்வியை சந்தித்து வரும் மோடி அரசு தொடர்ந்து  மக்களை திசை திருப்பும் செயலாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.  மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட  நினைக்கும் பாஜவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க  தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: