கண்காணிப்பு, மதிப்பீட்டு குழு நியமிக்காமல் நீர்வள நிலவள திட்ட பணிகள் நடந்தது எப்படி?: உலக வங்கி சந்தேகம்

சென்னை: தமிழக அரசு சார்பில் கண்காணிப்பு, மதிப்பீட்டு குழு நியமிக்காமல் ₹743 கோடியில் நீர்வள நிலவள திட்ட பணிகள் நடந்தது எப்படி என்று உலக வங்கி சந்தேகம் எழுப்பி உள்ளது. தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் நீர்வளநிலவள திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ₹3 ஆயிரம் கோடியில் 4778 ஏரிகள், 477 புதிய அணைகட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை நான்கு கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ₹743 கோடி செலவில் 1325 ஏரிகள், 107 அணைகட்டுகள் அமைத்தல், 45 செயற்கைமுறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கடந்த 2017ல் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 2018 முதல் இப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை 75 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2வது கட்டமாக ₹3 ஆயிரம் கோடியிலான 57 பேக்கேஜ் அடிப்படையில் 1,400 ஏரிகள், 120 அணைகட்டுகள் அமைத்தல், 15 செயற்கைமுறை செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு  தொடங்கும்.

இந்த நிலையில் நீர்வளநிலவள திட்டப் பணிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதே போன்று இப்பணிகளை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்ய தனியார் நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது தான் உலக வங்கியின் விதி. அந்த நிறுவனம் சார்பில் முடிந்த பணிகளை நேரில் ஆய்வு செய்து உலக வங்கிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையின் பேரில் தான் உலக வங்கி தமிழக அரசுக்கு நிதியை விடுவிக்க வேண்டும். ஆனால், தற்போது வரை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு குழு ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. மாறாக, தற்போது வரை அந்த குழுவை நியமிக்காமல் உள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த நிலையில் நீர்வளநிலவள திட்டபணிகள் தரமுடன் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய குழுவை நியமிக்காமல் இருப்பதன் மூலம் முறையாக பணிகள் நடைபெற்று இருக்குமா என்ற சந்தேகம் உலக வங்கிக்கு எழுந்துள்ளது.இருப்பினும் உலக வங்கியின் நிதியை பெறும் முயற்சியில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: