ஊராட்சி பதவிகளுக்கு 1.65 லட்சம் பேர் மனு மனுதாக்கல் இன்று முடிகிறது: ஏலம் எடுப்பதை தடுக்க 27 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  பதவிகளை ஏலம் எடுப்பதை தடுப்பது உட்பட தேர்தல் பணிகளை கவனிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 39 ஆயிரத்து 916 பதவிகளுக்கு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 3,217 பேரும், 10ம் தேதி 1,784 பேரும், 11ம் ேததி 16,654 பேரும், 12ம் தேதி 16, 360 பேரும், 13ம் தேதி 71,763 பேரும், 14ம் தேதி 55,881 பேர் என மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 814 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 35 ஆயிரத்து 464 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13 ஆயிரத்து 117 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1246 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். எனவே, ஏராளமானோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 19ம் தேதி 3 மணி வரை  வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினம் மாலையே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதன்அடிப்படையில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் கூட்டம் நடத்தி, தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பதட்டமான வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தேர்தல் வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகளுக்க  மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் பதவிகளை ஏலம் விடுவதை தடுக்கவும், அதையும் மீறி இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: