புதுடெல்லி: பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது பான் எண்ணை ஆதாருடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். இதுபோல், புதிய பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்த உத்தரவால் போலியான பான் எண்கள் ஒழிக்கப்பட்டன. இந்த இணைப்புக்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி கடைசி தேதி என இருந்தது. பின்னர் இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதோடு, இதுவே இறுதி கெடு என மத்திய நேரடி வரிகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.