×

தொழிலாளர் கட்சியை கழற்றி விட்ட வாக்காளர்கள்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் நெகிழ்ச்சி

லண்டன்: இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்த வடகிழக்கு இங்கிலாந்து பகுதி மக்கள், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பழமைவாத கட்சிக்கு இம்முறை வாக்களித்துள்ளனர். இவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாக போரிஸ் ஜான்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காததால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு இடைத் தேர்தலை சந்தித்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரது பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ் கட்சி) மொத்தம் உள்ள 650 இடங்களில் 364 இடங்களில் வென்று அபார வெற்றி பெற்றது.

எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் வசமிருந்த இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தொகுதிகளில் எல்லாம் பழமைவாத கட்சி வெற்றி பெற்றது. இதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என்பதில் இப்பகுதி மக்களும் உறுதியாக இருப்பதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று பேசிய போரிஸ் ஜான்சன், ‘‘தொழிலாளர் கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களித்தவர்கள் எல்லாம், பழமைவாத அரசுக்கு மாறி வாக்களித்தது, எவ்வளவு பெரிய விஷயம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். உங்களின் நம்பிக்கையை எங்கள் கட்சியினரும், நானும் நிறைவேற்றுவோம்,’’ என்றார்.


Tags : Voters ,Boris ,Labor Party ,UK ,Electorate ,England , Labor Party, disenfranchised, electorate, Boris, Prime Minister of England
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...