கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்க காங். மறுப்பு?: டெல்லியில் முகாமிட்டவர்கள் ஏமாற்றம்

பெங்களூரு: கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை அந்த பதவியில்  இருந்து மாற்றுவதில்லை என்றும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்பதில்லை என்றும்  கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த பதவிக்காக  டெல்லியில் முகாமிட்டு இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியுடன்  அங்கிருந்து பெங்களூரு திரும்பினர். கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக  இருந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர் 5ம் தேதி  இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாஜ கட்சி 12 தொகுதிகளில் வெற்றி  பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் மட்டும் கிடைத்தன.

தேர்தலில்  ஏற்பட்ட இந்த படுமோசமான தோல்வி காங்கிரஸ் மேலிட தலைவர்களை அதிர்ச்சி அடைய  வைத்தது. மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி  தலைவர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்து கட்சி மேலிடத்துக்கு  கடிதம் அனுப்பினார். அவரை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர்  தினேஷ்குண்டுராவ், கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோரும்  அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இந்த மூன்று பேரின்  ராஜினாமா கடிதங்கள் மீது கட்சி மேலிடம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே  பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா நீக்கப்பட்டு  புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் மாநில காங்கிரஸ் வட்டாரத்தில்  பரவ தொடங்கியது. இதனால் அந்த பதவியை பிடிப்பதில் காங்கிரஸ் மூத்த  எம்.எல்.ஏ.க்கள் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த பரபரப்பான  சூழ்நிலையில் மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு  கடந்த  புதன்கிழமை திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்ைச பெற்று வந்த அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இடைத்தேர்தலில் காங்கிரஸ்  படுதோல்வி அடைந்துள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து  சித்தராமையா நீக்கப்படுவார். அதுபோல் மாநில காங்கிரஸ் தலைவர்  தினேஷ்குண்டுராவ் பதவி இழப்பார் என சில தலைவர்கள் காத்திருந்தனர். இதை  எதிர்பார்த்து டெல்லியில் அடிப்படை காங்கிரசார் முகாமிட்டு அப்பதவியை பிடிப்பதற்கு லாபியில் ஈடுபட்டிருந்தனர். அதேநேரம்  சித்தராமையா மற்றும் தினேஷ்குண்டுராவுக்கு எதிராக மேலிடம் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவர்களது ராஜினாமா கடிதத்தையும் ஏற்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.  இதனால் டெல்லியில் காத்திருந்த தலைவர்கள்  ஏமாற்றம் அடைந்து பெங்களூரு திரும்பினர்.

Related Stories: