வருவாய் இழப்பை தடுக்க தீவிரம் ரயில்வே பிளாட்பாரத்திற்கு செல்ல டிக்கெட் கட்டாயம்: ரயில்வே துறை அதிரடி

வேலூர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ள ரயில்வே துறையை நவீனமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையை லாபகரமாக இயக்கும் வகையில் 100 செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் இயக்கம், தூய்மை பணி, ரயில் நிலையம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, டிக்கெட் வழங்கும் முறை, ஆகியவை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில்வேயின் வருவாய்யை அதிகரிக்கும் விதமாக ரயில் நிலையங்களில் மொபைல் ஆப் கால்டாக்ஸ் சேவை, உணவகம், தங்கும்விடுதி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வேதுறைக்கு எத்தகைய காரணங்களால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது, என்பது குறித்து வணிகப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பெரும்பாலான பொதுமக்கள் நடைமேடைக்கான டிக்கெட் பெறாமல் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வது கண்டறியப்பட்டது. குறிப்பாக சிறிய ரயில் நிலையங்களில் நடைமேடைக்கான டிக்கெட் இல்லாமல் வந்து செல்வது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக ரயில்வே துறைக்கான வருவாய்யை உறுதி செய்யும் வகையில், சிறிய மற்றும் பெரிய ரயில் நிலைய பிளாட்பாரத்திற்கு வந்து செல்ல பிளாட்பாரம் டிக்கெட் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அபராதம் கடுமையாக விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் ₹15க்கு விற்கப்படுகிறது. இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்நிலைய பிளாட்பாரத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. ரயில்வே விதிகளை மீறி நுழையும் பொதுமக்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பெரிய ரயில் நிலையங்களில் மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. தற்போது சிறிய ரயில் நிலையங்களில் நுழையும் பொதுமக்களுக்கும் பிளாட்பாரம் டிக்கெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ரயில் நிலையங்களுக்கு செல்ல பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துச் செல்ல வேண்டும். ரயில்வே விதிகளை மீறினால் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல், வெளிநபர்கள் ரயில் நிலையங்களுக்குள் வந்து செல்வதை தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. உள்நுழையும் மற்றும் வெளியேறும் வாயில்களில் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் வந்தால் அவர்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: