சிமெண்ட் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிமெண்ட் சாலை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி 6வது வார்டு, ரோடு மாமாந்தூர் பிள்ளையார்கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றித் தர வேண்டும் என ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இருப்பினும் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்ட அதிகாரிகள் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெய்து வரும் மழையால் இந்த மண் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. முதியவர்கள், சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 35க்கும் மேற்பட்டோர் இன்று காலை சேறும் சகதியுமாக காட்சி அளித்த சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள மண் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். இந்த சாலையை உடனடியாக தரம் உயர்த்தி சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என்றார். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: