முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 18ஆம் தேதி டெல்லிக்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19ஆம் தேதியன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது அமித் ஷாவின் உள்துறை அமைச்சக ஆலோசகர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பங்கேற்க உள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்தை எப்படி தமிழகத்தில் அமல்படுத்துவது என்று இதில் ஆலோசிக்க உள்ளனர்.

தேசிய குடியுரிமை பட்டியலை அசாமை தொடர்ந்து இந்தியா முழுக்க கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. இதை தமிழகத்தில் எப்படி கொண்டு வருவது என்று பாஜக ஆலோசிக்க உள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியும் அமித் ஷாவும் ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேச இருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் போது பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா கலந்து கொள்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

அப்போது தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவதோடு திட்டங்களுக்கான நிதியையும் கோருவார் என்றும், மேலும் மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மத்திய அரசு தாக்கல் செய்யும் அனைத்து மசோதாக்களை அதிமுக ஆதரித்து வருகிறது. தமிழகத்தில் பலரின் எதிர்ப்பை மீறியும் அதிமுக கட்சி ராஜ்ய சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருக்கிறார்.

மேலும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மெரினாவில் உள்ள மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முதல்வர் அழைப்பு விடுக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: