திருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை

திருவாரூர்: திருவாரூர் அருகே நள்ளிரவில் தேர்தல் நடத்தும் அலுவலகமான ஊராட்சி அலுவலகத்தை உடைத்து வேட்புமனுக்களை அள்ளிச்சென்று எரிக்க முயன்றுள்ளனர். டெபாசிட் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. 27 மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள 91,975 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டு கட்டங்களுக்கும் வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. 13ம் தேதி வரை மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை கடந்த 2 நாட்களாக அறிவித்து வருகின்றன. இதனால் நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் சுமார் 1 லட்சம் பேர் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. நாளை(திங்கள்) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்து விடும். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்றும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. இங்கு வார்டு உறுப்பினருக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக கதவு திறந்து கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி செயலாளர் கணபதி விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது வேட்பாளர்கள் அளித்திருந்த மனுக்கள், அலுவலகத்துக்கு வெளியே வனப்பகுதியில் சிதறிக்கிடந்தன. மேலும் மேஜை டிராயரில் வைத்திருந்த வேட்பாளர்கள் அளித்த டெபாசிட் பணம் ரூ.1500 திருட்டு போயிருந்தது.

நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டிராயரையும் உடைத்து பணத்தை திருடி உள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வேட்பு மனுக்களையும் எடுத்து வெளியில் வீசி விட்டுசென்று விட்டது தெரியவந்தது. இதுபற்றி கணபதி அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வனப்பகுதியில் சிதறிக்கிடந்த வேட்பு மனுக்களை ஊராட்சி செயலாளர் கணபதி சேகரித்தார். அதில் மனுக்கள் எதுவும் குறைகிறதா என்று ஆய்வு செய்து வருகிறார். மர்ம நபர்கள் வேட்பு மனுக்களை எரிக்க முயற்சி செய்திருக்கலாம். அப்போது ஆள்நடமாட்டம் இருந்தால் மனுக்களை வீசி விட்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற அலுவலக கதவை உடைத்து வேட்பு மனுக்களை வெளியில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: