×

கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில் உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று துவங்கியது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 26 கோயில் யானைகள் பங்கேற்கின்றன. இந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் துவங்கப்பட்ட இந்த யானைகள் நலவாழ்வு முகாம், கடந்த 2012ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 12வது யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று காலை துவங்கியது. இந்த முகாமில், தமிழகம் முழுவதும் இருந்து 26 யானைகள் பங்கேற்கின்றன. யானைகளுக்காக மொத்தம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை குளிக்க வைக்க குளியல் மேடை, ஷவர் மேடை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் 48 நாட்கள் நடக்கிறது.

முகாமில் பங்கேற்பதற்காக முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலியதாவும், 2வதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் யானை கோதையும், 3வதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரியும், 4வதாக காளையார் கோவில் யானை சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லியும், 5வதாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியும், 6வதாக மதுரை கள்ளழகர் கோயில் யானை சுந்தரவல்லி தாயாரும், 7வதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவும், 8வதாக திருச்சி தாயுமானவர் சுவாமி கோயில் யானை லட்சுமியும் 9வதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளும் 10வதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதியும் வந்து நேற்று மாலை வந்து சேர்ந்தன. தொடர்ந்து இன்று காலை யானைகள் பவானி ஆற்றில் குளிக்கவைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

Tags : Elephants Refreshment Camp ,Thekkampatti ,Coimbatore Elephants , Elephants, camping
× RELATED தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட...