கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்

திருமலை: டிக்-டாக் மோகத்தால் கணவரை பிரிந்து 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு இளம்பெண்ணுடன் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆதோணி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அர்ச்சனாவின் சகோதரி லட்சுமி பெங்களூருவுக்கு பணி நிமித்தமாக சென்றார். பணிபுரியும் இடத்தில் லட்சுமிக்கு, அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் அஞ்சலி, அர்ச்சனாவுடன் போனில் தொடர்ந்து பேசி வந்தார். இதில் இருவரும் போனில் பேசியபடியே டிக் டாக் வீடியோவில் பதிவு செய்ய தொடங்கினர். பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது மற்றும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பாட்டுபாடி அதை டிக்டாக் வீடியோவில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த இருவரின் நட்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இவர்களுக்கிடையே ஓரின சேர்க்கை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அஞ்சலி ஒரு வாரத்திற்கும் மேலாக அர்ச்சனா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். இவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த அர்ச்சனாவின் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் இனி இருவரும் எவ்வித தொடர்பும வைத்துக்கொள்ளக்கூடாது என எச்சரித்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த அஞ்சலி, ‘என்னையும் அர்ச்சனாவையும் பிரிக்க நினைக்கும் குடும்பத்தில் இருந்து அர்ச்சனாவை நிரந்தரமாக பிரிப்பேன்’ எனக்கூறிவிட்டு சென்றாராம். அதன்படி அஞ்சலி, யாருக்கும் தெரியாமல் அர்ச்சனாவுக்கு போன் வாங்கி கொடுத்து தொடர்ந்து பேசி வந்தார். இதனை கவனித்த பெற்றோர் மற்றும் கணவர் ரவிகுமார் ஆகியோர் அர்ச்சனாவை கண்டித்தனர். கணவரின் கண்டிப்பு அதிகமானதால் அர்ச்சனா தனது வீட்டிலிருந்து வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அர்ச்சனா, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டில் இருந்தும் வெளியேறி அஞ்சலியுடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் கர்னூல் முதலாவது நகர காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். டிக்-டாக் மோகத்தால் 2 குழந்தைகளின் தாய், கணவனை விட்டு இளம்பெண்ணுடன் வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : dick-talk , tik tak
× RELATED திருமணமான பெண் இறந்தால் அவரது தாய்...