×

பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு

மணிலா: பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ‘நெருப்பு வளையம்’ எனப்படும் மிக ஆபத்தான பகுதியில் இந்த நாடு அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கின.

பலஅடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டன. இதனால் பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சில நிமிடம் நீடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் மக்கள் தொகை அதிகம் கொண்ட தவாவ் நகருக்கு தெற்கே மையம் கொண்டிருந்தது. எனினும் குறைவான அளவிலேயே சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருட்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும் அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Tags : earthquake ,Mindanao ,region ,Philippines , Philippines, Powerful Earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்