மத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் தொழிலாளர் நலனுக்காக இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கடந்த ஐந்தாண்டுகளாக மாநில அரசு நிலம் ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் முந்திரி, ரப்பர், பீடி சுற்றுதல், ஜவுளி நிறுவனங்கள் உட்பட தனியார் வணிக, வர்த்தக நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மேம்பட்ட மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமெனில் இஎஸ்ஐ திட்டத்துடன் இணைந்த தனியார் மருத்துவமனைகளையோ அல்லது அரசு மருத்துவமனையையோ நாட வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற பண செலவுகள், நேர விரயம் போன்றவை தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.

மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, ஆரல்வாய்மொழி, நித்திரவிளை, இடைக்கோடு, மணவாளக்குறிச்சி, கருங்கல், தக்கலை ஆகிய எட்டு இடங்களில் மருந்தகங்களுடன் இஎஸ்ஐ மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு படுக்கை வசதியுடன் சிகிச்சை எங்கும் இல்லை.  இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ரூ.106 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட நவீன இஎஸ்ஐ பல்நோக்கு மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அனுமதி வழங்கியது. இஎஸ்ஐ பல்நோக்கு மருத்துவமனை அமைக்க மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் நிலம் தேவை ஆகும். கடந்த 13.6.2014 அன்று தமிழக அரசால் 2.5 ஏக்கர் நிலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தினுள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவேண்டும் என மத்திய தொழிலாளர் ஈட்டுறுதி நல வாரியம் கேட்டு கொண்டதையடுத்து, 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுமதி கேட்டு 12.12.2014 அன்று குமரி மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டின. இஎஸ்ஐ மருத்துவமனை திட்டம் கடந்த ஐந்தாண்டுகளாக முடங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசாரிபள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போதிய இடவசதி இருந்தபோதிலும் அதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அதிகாரிகளால் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

பின்னர் ஆசாரிபள்ளம் தவிர்த்து வேறு இடத்தில் உள்ள காலியிடங்கள் உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் நாகர்கோவில், கோணம் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் அருகே இடம் பார்வையிடப்பட்டது. எம்பிளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (இஎஸ்ஐசி) மாநில மருத்துவ ஆணையர் மற்றும் அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு சென்றனர். அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த இடம் தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் இந்த திட்டம் தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.   இதனால் திட்டத்திற்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயன்படுத்தப்படாததால் மத்திய அரசுக்கே திரும்பி சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதி அந்த நிதியாண்டு வரை பயன்படுத்த தகுந்த விதத்தில் இருக்கும். பின்னர் மத்திய அரசுக்கு திரும்பி சென்றுவிடும்.  

திட்டம் செயல்படுத்தப்படும் தருவாயில் மீண்டும் நிதித்துறைக்கு கடிதம் எழுதி அவர்கள் கேட்கின்ற விளக்கங்களுக்கு பதில் அளித்து மட்டுமே நிதியை திரும்ப கேட்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. மத்திய அரசு கேட்டுக்கொண்டபோதிலும் மாநில அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் திட்டம் முடங்கியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் தற்போது அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

‘தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டும்’
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான முந்திரி தொழிலாளர்கள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மத்திய அரசு இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்தது. நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்து கொடுக்கவில்லை. அதனால் இதுவரை மருத்துவமனை வரவில்லை. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டரை ஏக்கர் நிலம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

அது போதியதாக இல்லை என்று நிர்வாகம் கூறிவிட்டது. ஆனால் பின்னர் ஒரே வளாகத்தில் இருவித மருத்துவமனைகள் இருந்தால் சரியாக இருக்காது என்றும் கருத்துகள் எழுந்தன. பல இடங்களிலும் மருத்துவமனைக்கு இடங்கள் தேர்வு நடைபெற்றதாக கூறினர். ஆனால் இவ்விஷயத்தில் மாநில அரசின் முறையான ஒத்துழைப்பு இல்லாததால் இப்போது இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முடியாமல் போயுள்ளது. எனவே இதற்காக பிரத்யேக அதிகாரிகளை நியமித்து தமிழகத்தில் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தேவையான நிலம் ஒதுக்கீடு செய்து இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : State Government ,Millions , Federal Government Fund, State Government, ESI Super Specialty Hospital Program
× RELATED ைஹட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தும்