விளைச்சலுக்கும் வந்த சோதனை கோவில்பட்டி பகுதியில் அழுகும் வெங்காய பயிர்கள்: நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா?

கோவில்பட்டி: கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் தொடர் மழையால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடை நேரத்தில் வெங்காயம் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உரிய நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டார கிராமங்களில் இந்தாண்டு புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களை உழுது பண்படுத்தி கம்பு, சோளம், மக்காச்சோளம், மிளகாய், சூரியகாந்தி, சிவப்பு சோளம், உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களை பயிரிட்டனர். இதே வட்டார கிராம விவசாயிகளில் பெரும்பாலோனோர் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் விதைகளை விதைத்து சாகுபடி பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் விளைநிலங்களில் விதைக்கப்பட்ட வெங்காயங்களின் மேற்பகுதியில் நன்றாக தண்டுகள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் இந்தாண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. தற்போது வெங்காயம் கிலோ ரூ.200க்கு விற்கப்படும் நிலையில் விவசாயிகளும் வெங்காய பயிர்களை கண்ணும், கருத்துமாக காத்து வந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில், வெங்காயம் அறுவடை செய்யக்கூடிய தருணத்தில், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் வெங்காயத்தின் தண்டு பகுதிகள் அழுகி வருகிறது. இதில் 80 சதவீதம்  வரை வெங்காயம் அழுகி விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதிக செலவு செய்து ஊன்றிய வெங்காயம் அழுகி வருவதால், அழுகிய வெங்காயத்தை அப்படியே தண்டுப்பகுதியோடு பிடுங்கி எடுத்து வருகின்றனர்

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாகவே அறுவடை செய்யக்கூடிய நேரத்தில் நன்றாக வளர்ந்த வெங்காயம், நிலத்தில் ஈரப்பதம் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பது போன்ற காரணங்களால் மட்டுமே வெங்காயத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநிலம், பெல்லாரி பகுதிகளில் பல்லாரி வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பெல்லாரி பகுதியிலும் பெய்து வரும் தொடர் மழையால் பல்லாரி விலை விண்ணை தொடும் அளவிற்கு விலை உயர்ந்து விட்டது என விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.  

தமிழகத்தில் குறிப்பாக கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய வட்டார கிராமங்களில் வெங்காயம் அறுவடை செய்திருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்திருக்கும். வெங்காய தட்டுப்பாட்டை ஓரளவு ஈடு செய்திருக்கலாம். இங்கு பயிர் செய்துள்ள வெங்காயத்தை அறுவடை செய்து, சந்தைக்கு விற்பனைக்கு வரும்போது, வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே வெளிநாடுகளில்   இருந்து வெங்காயத்தை அதிக விலைக்கு கொள்முதல் செய்து இறக்குமதி செய்வதை தவிர்த்து, இங்கு விளையும் வெங்காயத்திற்கு கிலோவிற்கு ரூ.10 வரை விலையை உயர்த்தி வழங்கினாலே வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி பசுபதி கூறுகையில், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் 10 ஏக்கர் மானாவாரி நிலம் எனக்கு உள்ளது. வெளியிடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்தேன். ஆனால் தொடர் மழையால் வெங்காயம் அழுகி விட்டதால், இதற்காக செய்த செலவு தொகையை கூட வெங்காய சாகுபடியில் ஈடுகட்ட முடியாத நிலையில் உள்ளேன். நான் மட்டுமின்றி வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்ந்துள்ள நேரத்தில் பயிர்கள் அழுகி விட்டது கவலை அளிக்கிறது. எனவே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், என்றார். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். தற்போது வெங்காயம் விலை உச்சத்தில் உள்ள நிலையில், சாகுபடி செய்த விவசாயிகளின் வெங்காய பயிர்கள் அழுகி விட்டதால் விதை வெங்காயமாவது கிடைக்குமா என்ற பரிதாப நிலை உருவாகியுள்ளது.

* அறுவடை நேரத்தில் அழுகியது:
கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் வட்டார கிராமங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், விவசாய தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தாண்டு இந்த வட்டார கிராமங்களில் பருவமழை பெய்தாலும், வழக்கத்திற்கு மாறாக தொடர் மழை பெய்ததால், வெங்காயம் பயிர் விவசாயத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெங்காயம் பயிரிட்டுள்ள   மானாவாரி நிலத்தில் தொடர் மழையால் ஈரப்பதம் இருப்பதால், வெங்காயத்தின் மேற்பகுதி தண்டு பகுதிகள் அழுகி விட்டது. அறுவடைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அழுகிய வெங்காயங்களை விவசாயிகள் பிடுங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர். வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில் பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு தகுந்த நஷ்ட ஈடு, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

* கணக்கெடுத்து வருகிறோம்:
தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறுகையில், கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் வத்தல் பயிரிட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து பெய்த கனமழையால் வெங்காய சாகுபடியில் பெரும் பாதிப்பு   ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். அதாவது தொடர் மழையால் வெங்காயங்களின் தண்டு பகுதி அழுகி வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர், வெங்காயம் பயிரிட்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய தோட்டக்கலை துறைக்கு   உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் உத்தரவையடுத்து தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வெங்காயம் சாகுபடி நிலங்களை தோட்டக்கலைத் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர், என்றார்.  

* தேவையை குறைத்த மக்கள்:
தற்போது சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்), பல்லாரி வெங்காயம் விளைச்சல் மற்றும் அறுவடை நேரத்தில் தொடர் மழையால் அழுகி வருவதோடு, வெங்காய விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ.160 வரையும், பல்லாரி வெங்காயம் கிலோவிற்கு ரூ.150 வரையும் மார்க்கெட்டுகளில் விற்கப்படுவதால், கிலோ கணக்கில் வாங்கி சென்ற பொதுஜனங்கள், விலை உயர்வால், கால் கிலோ, 100 கிராம் போன்ற எடைகளில் வாங்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. விலை உயர்வால் பெரிய ஓட்டல்கள் கூட வெங்காயத்தின் தேவையை குறைத்துக் கொண்டு வெள்ளரி, முட்டைகோசை வெங்காயத்திற்கு பதிலாக பயன்படுத்துகின்றனர்.

Tags : area ,Kovilpatti , Yield, test, temple bar area, rotten onion crops, relief, compensation?
× RELATED கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில்...