×

சிண்டிகேட் அமைத்த சேகோசர்வ்- ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கு விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம்: போராட்ட களத்தில் விவசாயிகள், வியாபாரிகள்

ஆத்தூர்: தமிழகத்தில் உள்ள சேலம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரதான உற்பத்தி பொருளாக மரவள்ளி கிழங்கு உள்ளது. ஏறத்தாழ தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்கினை கொண்டு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. மரவள்ளி கிழங்கினை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து மரவள்ளி கிழங்கினை பெற்று அதனை ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுப்பும் பணியில் தரகர்கள் என்னும் வியாபாரிகள் பெரும் அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். தரகர்கள் மரவள்ளி விவசாயிகளுக்கும், ஆலை உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய பாலமாக இருந்து செயலாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது சேகோ ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் விற்பனை ஏஜெண்டாக செயலாற்றிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சேகோசர்வ் என்னும் கூட்டுறவு நிறுவனத்தினரும் இணைந்து வியாபாரிகள் இல்லாமல் நேரடியாக மரவள்ளி விவசாயிகளிடமிருந்து மரவள்ளி கிழங்கினை பெறும் வகையில் ஒரு செயல் திட்டத்தை ஏற்படுத்த ஆயத்தமாகினர். இதற்காக  கூட்டுறவு நிறுவனமான சேகோசர்வின் நேரடி மரவள்ளி கொள்முதல் மையங்கள் ஆத்தூர், செல்லப்பம்பட்டி, நாமகிரிபேட்டை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஆலை உரிமையாளர்களுக்கு சுழற்சி முறையில் மரவள்ளி அனுப்பிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக சேகோசர்வ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சேகோ ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கினை விவசாயிகளிடமிருந்து பெறும் தரகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகளிடமிருந்து உங்களால் வாங்கப்படும் மரவள்ளி கிழங்குகள் இனி நேரடியாக சேகோ ஆலைகளுக்கு அனுப்பாமல் சேகோசர்வ் மூலம் அமைக்கப்பட்டுள்ள மரவள்ளி நேரடி கொள்முதல் மையங்களுக்கு தான் அனுப்பிட வேண்டும். மேலும் அங்கிருந்து அவர்கள் சொல்லும் ஆலைகளுக்குதான் மரவள்ளியை சப்ளை செய்திட வேண்டும், தன்னிச்சையாக உங்களின் விருப்பத்திற்கு ஆலைகளுக்கு எடுத்து செல்லகூடாது என்கிற நிபந்தனை பேச்சு வார்த்தையின் முடிவில் விதிக்கப்பட்டது. இதனை தரகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இது மரவள்ளி கிழங்கு உற்பத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் முயற்சி என எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த நிபந்தனைக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம் என கூறி பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டனர்.

மரவள்ளி ஆலை உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் சேகோசர்வ் அமைப்பினை பயன்படுத்தி மரவள்ளி கிழங்கு உற்பத்தியாளர்களின் வாழவாதாரத்தை முறிக்கும் வகையில் மரவள்ளி கிழங்கிற்கான உரிய விலை கிடைக்காமல் செய்திடும் இந்த செயலை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அரசு தரப்போ, சேகோசர்வ் அமைப்போ இதுவரை இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் மவுனமாக உள்ளது. தற்போது மரவள்ளி அறுவடை துவங்கியுள்ள நிலையில் ஆலை அதிபர்கள் நேரடியாக கொள்முதல் மையத்தின் மூலம் மட்டுமே கொள்முதல் செய்வோம் என்று முடிவு செய்துள்ளனர். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என விவசாயிகளும் உறுதியாக உள்ளனர். இதனால் மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யப்படாமலும், ஆலைகள் இயங்காத நிலையும் நீடித்து வருகிறது.

இதுகுறித்து மரவள்ளி விவசாயிகள் கூறுகையில், ‘‘உற்பத்தி பொருளுக்கு உற்பத்தியாளர்கள் தான், விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் எங்களின் உற்பத்தி பொருளை இப்படிதான் நீங்கள் விற்பனை செய்திட வேண்டும் என நிர்பந்தம் செய்வது எந்த விதத்திலும்  நியாயமாகாது.  சேகோசர்வ் என்பது சேகோ உற்பத்தியாளர்களுக்கு சாதகமான ஒரு கூட்டுறவு அமைப்பாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக எந்த ஒரு பலனும் கிடைக்காத நிலையே உள்ளது. எங்களின் உற்பத்தி பொருளுக்கு அவர்கள் கொள்முதல் நிலையங்களின் மூலம் தான் விற்பனை செய்திட வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

தரகர்கள் இல்லாமல் வியாபாரம் என்று ஆலை அதிபர்கள் கூறுகின்றனர். ஆனால் தரகர்கள் தான், நாங்கள் மரவள்ளி பயிரிடும்போதிருந்தே எங்களுடன் உறுதுணையாக செயல்படுகின்றனர். பொருளாதார தேவைகள், மற்றும் வேலை பளுவை குறைக்கும் வகையில் விளைந்த மரவள்ளியை அறுவடை செய்ய உதவுகின்றனர். அதனை ஆலைகளுக்கு எடுத்து செல்லும் வரையிலான பணிகளை தாங்களே முன்னிற்று செய்கின்றனர். எங்களுக்கு உரிய விலையையும் கொடுக்கின்றனர். அவர்களை எவ்வாறு நாங்கள்  புறக்கணிக்க முடியும்? ஆலைஅதிபர்களும், சேகோசர்வும் சிண்டிகேட் அமைத்து எங்களை அடியபணிய வைக்க நினைப்பது அபத்தமானது’’ என்றனர்.

* கலப்படம் தடைபடும் உரியவிலை கிடைக்கும் ஆலை உரிமையாளர் தகவல்:
சேகோ ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், ‘‘கரும்பு, நெல் போன்ற விவசாய விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. இதேபோல் மரவள்ளி கிழங்கிற்கும் உரிய விலை நிர்ணயத்தை அரசு செய்திட வேண்டும். இந்த அடிப்படையில் தான்,   இதுபோன்ற ஒருமுனை கொள்முதல் திட்டத்தை எங்கள் சங்கத்தின் மூலம் வலியுறுத்துகிறோம். அதிக அளவில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி பொருட்கள் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் கடந்த காலங்களில் கலப்பட உற்பத்தியால் விற்பனையில் பெரும் சரிவுகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. சேகோ பொருட்களில் கலப்படங்கள் செய்ததால், உணவு பொருளாக பயன்படுத்திய வட மாநிலங்களில் ஒதுக்கி தள்ளும் நிலையும் உருவானது. ஒருமுனை கொள்முதல் மற்றும் விற்பனையால் கலப்படமின்றி தரமான சேகோ பொருட்களின் உற்பத்தி செய்யும் நிலை உருவாகும். விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்’’ என்றார்.

* மாவு தரம் பார்க்கும் போது ஏமாற்ற வாய்ப்பு: விவசாயி ஆதங்கம்:
விவசாயி விஜயகுமார் கூறுகையில், ‘‘மரவள்ளி என்பது பருவமழை பொய்த்தாலும், நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் போராடி காப்பாற்றி சாகுபடி செய்யும்  ஒரு ஆண்டு பயிராகும். ஆண்டு முழுவதும் உழைத்து விளைவிக்கப்பட்ட மரவள்ளி கிழங்குக்கு அறுவடையின் போது, மாவு தரத்தை அளவீடு செய்து அதற்கான விலையை தரகர்கள் என்னும் வியாபாரிகள் நிர்ணயிக்கின்றனர். மேலும் அறுவடையின் போது வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு போன்ற செலவினங்களை அவர்கள் முன்பணமாக கொடுத்து உதவிகளை செய்கின்றனர். மேலும் மரவள்ளி விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையும் கிடைக்கிறது. ஆனால் தற்போது ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலமாக நேரடி கொள்முதல் என்றால் விவசாயிகளுக்கு தேவையில்லாத அலைச்சல்களும், வேலை பாதிப்பும் ஏற்படுவதோடு மாவு தரம் பார்க்கும் விதத்தில் ஏமாற்றம் அடையகூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது,’’ என்றார்.

* விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு: தரகர் சங்க தலைவர் வேதனை:
தரகர்கள் சங்க தலைவர் பழனிவேல் கூறுகையில், ‘‘தற்போது சேகோசர்வ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்திக் கொண்டு ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒருமுனை கொள்முதல் என்கிற போர்வையில் வரு்கின்றனர். கிழங்குகளை அவர்கள் நிர்ணயம் செய்யும் எடை மிஷின் நிறுவனத்தில் தான் எடைபோட வேண்டும் என்று கூறுகின்றனர். கிழங்கில் உள்ள மாவு தரத்தினை அளவீடு செய்யும் போது, விவசாய தோட்டத்தில் மாதிரிகளை எடுக்காமல் மில்லிற்கு கொண்டு வரப்பட்ட லோடில் ஆலை அதிபர்கள் தாங்களாக தேர்வு செய்த கிழங்கினை மாதிரிக்காக எடுப்போம் என்கின்றனர். இதை விவசாயிகள் எற்றுக்கொள்ள வேண்டும் என்பதும்,  கிழங்கினை சுழற்சி முறையில் தான், அனைத்து ஆலைகளுக்கும் அனுப்ப வேண்டும் என்கின்றனர். இதனால் அதிகளவில் மரவள்ளி அறுவடை செய்யும் நேரத்தில் ஆலைகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படும். இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் தான் நாங்கள் ஆலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு உடன்படாமல் போராடி வருகிறோம்,’’ என்றார்.

Tags : traders ,Cocoserv - Plant ,field , Syndicate, Cocoserv - Plant Principals, Vegetable Tuber, Sales Fall, Risk, Struggle, Farmers, Traders
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...