மலையேற முடியாமல் வயதான பக்தர்கள் அவதி: சதுரகிரியில் ரோப்கார் அமைக்கப்படுமா? பெண் பக்தர்கள், முதியோர் எதிர்பார்ப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை

வத்திராயிருப்பு: சதுரகிரியில் மலையேற முடியாமல் அவதிப்படும் பெண்கள், வயதான பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்க வேண்டும். மேலும், இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு செல்லும் முக்கிய பாதையாக விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறைக்கு சென்று மலையேற வேண்டும். அது மட்டுமின்றி மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே வாழைத்தோப்பு, தேனி மாவட்டம், வருசநாடு பகுதியிலிருந்தும் மலைப்பாதைகள் உள்ளன. இருப்பினும் பக்தர்கள் தாணிப்பாறை வழியாகவே அதிகம் சென்று வருகின்றனர். இதுவே இக்கோயிலுக்கான முக்கிய பாதையாகவும் உள்ளது.

அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து 7 கிமீ தூரம் மலையில் நடந்து சென்று சதுரகிரி கோயிலை அடையலாம். மலைப்பாதை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2015ம் ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், மலைக்கு சென்ற பக்தர்கள் 9 பேர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதற்கு பிறகு எல்லா நாட்களிலும் சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி தலா 3 நாட்கள், பிரதோஷம் ஒரு நாள் என பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வனத்துறையினர், பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை தாணிப்பாறை வனப்பகுதி கேட்டை திறந்து மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் பாறை மற்றும் மேடு, பள்ளங்களை கடந்து நடந்து செல்கின்றனர் அடிவார பகுதியிலும், மலையில் 3 இடங்களில் கழிப்பறைகள் உள்ளன. ஆனால், வெயில்காலங்களில் இங்கு தண்ணீர் வருவதில்லை. குடிநீருக்கும் அவ்வப்போது கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் ஆறு, ஓடைகளை ஆபத்தான முறையில் கடந்தே செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் வந்தால், பக்தர்கள் கடந்து செல்லாமல் பாதி வழியிலேயே சிக்கிக் கொள்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்னையை தீர்க்க வனத்துறையினர் முன்வரவில்லை. பகலில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலையில் அடிவாரம் திரும்புகின்றனர். வழுக்குப்பாறை உள்ளிட்ட கடினமான பாதைகளில் சென்று வருவதால் வயதான மற்றும் பெண் பக்தர்கள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர். இதனை கருத்தில்கொண்டு 2014, செப்.18ம் தேதி அப்போதை சென்னை மெட்ரோ ரயில் பொது மேலாளர் சோமசுந்தரம் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வங்கி திட்டப்பொறியாளர் சந்திரசேகரன், வன உயிரினக் காப்பாளா் அசோக்குமார் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  மலை அடிவாரப்பகுதியில் உள்ள நெல்லிக்குண்டம் பகுதியில் ரோப்கார் அமைப்பதற்கேற்ற இடம் குறித்து ஆய்வு செய்தனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் இருந்து தவசிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும், ரோப்கார் தடையின்றி சென்று வருவதற்கான இடங்களையும் ஆய்வு செய்தனர். ஆனால், அதற்கு பிறகு ஆய்வு நடத்தப்படவில்லை. இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களின்போது கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்தும், பாதை சரியில்லாததால் பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால் பக்தர்கள் போராட்டங்களை நடத்துவது வாடிக்கையாக உள்ளது. 2015ம் ஆண்டு காட்டாற்று வெள்ள சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசு ரூ.10 கோடி செலவில் மாங்கேணி ஓடை, பெரியபடிவட்டான் ஓடை, சங்கிலிபாறை ஓடை, பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடை, ஆகிய ஓடைகளில் பாலங்கள் அமைப்பதற்கும் இடைப்பட்ட இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்கு மண்டபம் வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் தாணிப்பாறையிலிருந்து கோயில் வரை பாதை அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று கூறிச்சென்றனா். ஆனால் சங்கிலிப்பாறை வரை மட்டுமே பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பாதை அமைக்கப்படவில்லை. இடைப்பட்ட இடங்களிலும் பாலங்கள் அமைக்கப்படவில்லை.

இதேபோல் தாணிப்பாறை செக்போஸ்ட் பகுதியில் தடுப்புச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டது. ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், உரிய பணிகளை மேற்கொள்ளவில்லையென பக்தர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். எனவே, ரோப்கார் அமைக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களில் பக்தர்கள் மலையில் சிக்கினாலும், ரோப்கார் மூலமாக மீட்புப்பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும், ஆங்காங்கே சிறுசிறு தடுப்பணைகள் அமைத்து பக்தர்களுக்கு பற்றாக்குறையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும், ஆடி அமாவாசை நாட்களில் மொட்டை அடித்தவர்கள் குளிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்தனர். கழிப்பறைகளிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே, பக்தர்கள் தங்குவதற்கு மண்டபங்கள் கட்டித்தர அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக கோயில் நிர்வாகம் அன்னதானம் செய்து வந்தாலும், போதிய அளவில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலில் பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

Related Stories: