நாட்டுக்கோழி வளர்ப்பில் கொழிக்கும் வருமானம் கோழிப்பண்ணையானது உடுமலை தென்னந்தோப்பு

உடுமலை:  நாட்டுக்கோழி வளர்ப்பில் வருமானம் கொழிக்கிறது. உடுமலை அருகே தென்னந்தோப்பு கோழிப்பண்ணையாக மாறியது. திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். பருவமழை பொய்த்ததன் காரணமாக தென்னையில் போதுமான வருவாய் கிடைக்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 70 மரங்கள் வரை நடவுசெய்து அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுவது, உரம் வைப்பது, களை எடுப்பது என ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது. ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு 50 நாட்களுக்கு ஒரு முறை தோப்பில் தேங்காய் வெட்டு ஆரம்பிக்கும். காய்களின் தரத்தை பொறுத்து அவற்றை நேரடியாக விற்பனை செய்வதா? கொப்பரையாக தயார்படுத்துவதா? என தோப்பு உரிமையாளர்கள் தீர்மானிக்கிறார்கள்.

100 தேங்காய்களை உடைத்தால் முன்பெல்லாம் 15 கிலோ கொப்பரை கிடைக்கும். ஆனால், தற்போது வரட்சி காரணமாக 12 கிலோ கொப்பரை கிடைப்பதே அரிதாகி விட்டது. மேலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தேங்காய்கள் சிறுத்து. எடை குறைந்து மகசூல் மிகவும் குறைவான அளவிலே கிடைக்கிறது. இதனால் தென்னை விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மூலமும், சொட்டுநீர் பாசனம் மூலமும் தென்னந்தோப்பை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில், பெதப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பில் ஒரு பகுதியில் சுமார் 50 நாட்டுக்கோழிகளை வளர்க்க தொடங்கினார். சிட்டுவிடை, பெருவிடை என இரு வகை கோழிகளை வளர்க்க தொடங்கினார். இயற்கை முறையில் வளர்க்க தொடங்கியதால் வாரம் ஒரு முறை 25 முதல் 30 கிலோ வரை இவரிடம் இறைச்சிக்காக சுற்று வட்டார மக்கள் கோழிகளை வாங்கிச் சென்றனர்.

இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கவே தனது பண்ணையை விரிவுபடுத்த துவங்கினார். தற்போது, 1,500 சதுர அடி பரப்பளவில் ஒரு பண்ணை அமைத்து அதில் 2,000 நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். ஒரு கிலோ 350 ரூபாய் என்ற வீதத்தில் வாரம்தோறும் இவரிடம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வியாபாரிகள் கோழிகளை கொள்முதல் செய்கின்றனர். நாட்டுக்கோழி விற்பதன் மூலம் மாதம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சவுந்தரராஜனுக்கு வருவாய் கிடைக்கிறது. சிட்டுவிடை, பெருவிடை என தனித்தனி ரகங்களாக கோழிகளை விற்பனை செய்யும் சவுந்தரராஜன், ஒரு நாட்டுக்கோழி முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்கிறார்.கோழிகளுக்கு, நெல், சோளம், கம்பு, ராகி போன்றவற்றை உணவாக அளிக்கிறார். ரசாயன கலப்பு இன்றி, இயற்கையான முறையில் மேய்ச்சல் நிலங்களில் கோழிகளை வளர்க்கிறார்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தோப்பில் மேய்ச்சலில் விடுகிறார். பெருவிடை அல்லது கட்டுச்சேவல் என சொல்லப்படும் சண்டைக்கோழிகள் ஒரு வருடத்திலேயே 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விலை போவதாக தெரிவிக்கும் இவர், சிட்டுவிடை கோழிகளும் நல்ல வருவாய் இருப்பதாக கூறுகிறார். தென்னந்தோப்பு வளாகத்தில் கோழிப்பண்ணை அமைத்திருப்பதால் கோழியின் எருக்கள், தென்னைக்கு நல்ல உரமாக அமைவதாகவும், இதன்மூலம் தேங்காய் மகசூல் அதிகரிப்பதாகவும் கூறுகிறார். 350 தென்னை மரங்கள் உடைய தனது தோப்பில், கடந்த ஆண்டு 3,000 காய்களும், அதன் பின் நான்காயிரம் காய்களும், சமீபத்தில் 7000 காய்களும் மகசூல் எடுத்துள்ளார்.நாளொன்றுக்கு இவரது பண்ணையில் 40 முதல் 60 கோழிகள் முட்டையிடுகின்றன. முட்டை விற்பனை போக, எஞ்சியவற்றை குஞ்சுபொரித்து அவற்றை பண்ணை விரிவாக்கத்திற்கு பயன்படுத்துகிறார்.

தென்னையைவிட கோழிப்பண்ணை தனக்கு கூடுதல் வருவாய் தருகிறது என்கிறார் இவர். கூடுதல் வருவாய்க்காக தனது தென்னந்தோப்புக்கு உள்ளேயே கோழிப்பண்ணை அமைத்து அதன்மூலம் வருவாய் ஈட்டி வரும் இவரது முயற்சி அருகில் உள்ள தோட்டத்துக்காரர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றி சவுந்திரராஜன் கூறுகையில்: ‘’ரசாயன மருந்து செலுத்தி, பிராய்லர் கோழிகளை எடை அதிகரிக்க செய்கிறார்கள். இது ஆபத்தானது. இயற்கை முறையில் வளரும் நாட்டுக்கோழிகளை சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கிறது.  இத்தொழிலில் நல்ல வருவாய் கிடைப்பதால், முழு கவனமும் இதில்தான் உள்ளது’’ என்றார்.

Related Stories: