இடிந்து விழும் அபாயத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள்: உயிரை கையில் பிடித்துக்கொண்டு பரிதவிக்கும் மக்கள்

கோவை: கோவையில் இடிந்து விழும் அபாயத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பரிதவிக்கின்றனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், கோவை வெரைட்டிஹால் ரோடு சிஎம்சி காலனி, உக்கடம், சித்தாபுத்தூர், செல்வபுரம் வடக்கு, தெற்கு, எழில்நகர், ஐயுடிபி உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இவை, தற்போது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. பல கட்டிடங்களில் மேல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள்கூட இல்லாத நிலை இருக்கிறது. வீடுகளின் கதவு, ஜன்னல்கள், சுவர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. பல அடுக்குமாடிகளில், பால்கனி அந்தரத்தில் தொங்குகிறது. இவை, எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.  

முற்றிலும் சேதம் அடைந்துள்ள இக்குடியிருப்புகளை இடித்து தள்ளிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர குடிசை மாற்று வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, சிஎம்சி காலனி, உக்கடம், செல்வபுரம் பகுதிகளில் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இவர்களின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. அதனால், இந்த வீடுகளை காலிசெய்ய அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வேறு இடங்களில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். ஆனால், இதற்கு குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக பல ஆண்டு காலம் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு செல்ல மாட்டோம், நாங்கள் இருக்கும் இடத்திலேயே வீடுகளை கட்டித்தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் வசிக்கும் இடங்களில் குடியிருப்புகள் கட்டித்தர குடிசைமாற்று வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்கடம், சிஎம்சி காலனி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிசைமாற்று வாரியம் சார்பில் சேதமடைந்து காணப்படும் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், இப்பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பெரும்பாலும் மழைக்கு இடியும் நிலையில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கட்டித்தரப்படும் புதிய வீடுகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும் எனவும், விரைவில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* இதுகுறித்து சிஎம்சி காலனி பகுதியை சேர்ந்த கண்ணன் கூறியதாவது: சிஎம்சி காலனியில் தரைத்தளத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் மொத்தம் 13 பிளாக் உள்ளது. இங்கு, 432 குடியிருப்புகள் இருக்கிறது. சுமார், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். இந்த கட்டிடங்களை முறையாக பராமரிப்பு செய்யாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதில், 4,5,6 ஆகிய பிளாக்குகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இந்த பிளாக்குகளில் உள்ளவர்களை உடனடியாக காலிசெய்ய அறிவுறுத்தியுள்ளனர்.  பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் எனவும், அதனை 400 சதுர அடியில் கட்டித்தருவதாகவும் தெரிவித்துள்ளனர். 18 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால், அருகில் உள்ள தற்காலிக வீடுகளில் குடியேற முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு கண்ணன் கூறினார்.

* சிஎம்சி காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுமதி கூறியதாவது: எங்கள் இடத்தில், எங்களுக்கு வீடு வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. நான், பிறந்தது முதல் இங்குதான் வாழ்ந்து வருகிறேன். வேறு இடத்திற்கு செல்ல மாட்டோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் வீடு இடித்து கட்டும் வரை அருகேயுள்ள மைதானத்தில் ஏற்படுத்தியுள்ள தற்காலிக குடியிருப்புகளில் தங்க அறிவுறுத்தியுள்ளனர். தற்போது தற்காலிக குடியிருப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சுற்றுசுவர் உள்ள குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம், சுற்றுசுவர் இல்லாத வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை அளிக்கவேண்டும். இந்த குடியிருப்புகளில் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க கேட்டுள்ளோம். மேலும், மழைக்காலங்களில் மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டி, வீடு ஒதுக்கும் வரை நாங்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வேண்டிய நிலையுள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்றாலும் கூட, எங்களின் இடத்தில் எங்களுக்கு வீடு என்பதற்காக சம்மதம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு சுமதி கூறினார்.

* கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திக் கூறியதாவது: கோவை சிங்காநல்லூர், உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை 35 வருடங்களுக்கு முன், பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கினர். ஆனால், 35 வருடங்களுக்கு உள்ளாகவே இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே வீடுகள் பாழடைந்து போனதற்கு அரசின் சரியில்லாத, முறைகேடான கட்டுமானமே காரணம்.

இதற்கு முழு பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும். இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இனி எங்கு செல்வது என்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் தவிப்பதை போன்ற நிலையில் உள்ளனர். இதை, அரசு வேடிக்கை பார்க்காமல், இந்த மக்களுக்கு அதே பகுதியில் மாற்று இடங்களில் தற்காலிகமாக வீடுகள் ஒதுக்கி தங்குவதற்குண்டான ஏற்பாடுகளையும், இது மட்டுமின்றி பழைய சிதிலமடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தரமான வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.

* இதுபற்றி குடிசைமாற்று வாரிய அதிகாரிகள்  கூறுகையில்,

 “பாதுகாப்பு இல்லாத மற்றும் சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய  வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்தாப்புதூர்  பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. சிஎம்சி  காலனியில் உள்ள பழைய வீடுகள் விரைவில் இடிக்கப்படும். மேலும், உக்கடம், செல்வபுரம், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள  வீடுகளை இடித்துவிட்டு, அப்பகுதியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories: