மழையால் ஒழுகிய அரசு டவுன்பஸ்: குடை பிடித்தபடி பயணித்த பயணிகள்

ஆம்பூர்: குடியாத்தத்தில் இருந்து நேற்று ஆம்பூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்ஸில் மழையால் பல இடங்களில் ஒழுகியதால் பயணிகள் குடை பிடித்தபடி பயணித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கு நேற்று மதியம் 12 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டது. ஜி6 என்ற தடத்தில் இயக்கப்பட்ட இந்த அரசு டவுன் பஸ்  சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வழிநெடுகிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் மழைநீர் ஒழுகத் தொடங்கியது.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு இடங்களில் ஒழுக தொடங்கிய மழைநீர் நேரம் செல்ல செல்ல அனைத்து பகுதிகளிலும் ஊற்றதொடங்கியது. இதைக்கண்ட பயணிகள் சிலர் தங்களது பயணத்தை கைவிட்டு அருகிலிருந்த ஊரில் பஸ்சிலிருந்து இறங்கி சென்றனர். மேலும்,  பள்ளி முடிந்து வீடு  திரும்பிக்கொண்டிருந்த மாணவ, மாணவியரும் மழைநீர் தங்கள் மீது விழுந்ததால் நனைந்தபடி அவதிப்பட்டனர். அதே நேரத்தில் மழை காரணமாக குடை கொண்டு வந்த பயணிகள் சிலர் குடை பிடித்தபடி பஸ்சில் பயணித்தனர். மழையில் நனைந்த மாணவ, மாணவியர்  நனையாத படி அவர்களுக்கும் குடை பிடித்து உதவினர். மேலும், அப்பகுதியினர் குடியாத்தம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளருக்கு போனில் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். அதற்கு சேதமைடைந்த பஸ்சின் மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக மேலாளர் உறுதியளித்தார்.

மேலும் ஆம்பூரில் உள்ள போக்குவரத்து பணிமனையில் அந்த பஸ் நிறுத்தப்பட்டு மாற்று பஸ் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மாற்று பஸ் ஏற்பாடு செய்யாமல் அதே பஸ் மீண்டும் குடியாத்தத்திற்கு ஆம்பூரில் இருந்து இயக்கப்பட்டது. இதனால், ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: