ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை... சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திருமலை: ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்தவர் ஆயிஷா மீரா. பி.பார்மசி மாணவியான இவர், கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கிருஷ்ணா மாவட்டம், இப்ராகிம் பட்டணத்தில் உள்ள கல்லூரி விடுதியில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில்  முக்கிய அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது கூறப்பட்ட நிலையில் போலீசார் சத்தியம் பாபு என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் சத்தியம் பாபு 9 ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதற்கு படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர், உண்மை குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் அப்பாவியை கைது செய்து சிறையில் அடைத்தநிலையில் அவர் விடுதலையானதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் அப்போதைய நகரி தொகுதியின் எம்எல்ஏவான நடிகை ரோஜா, இந்த கொலை வழக்கின் உண்மை குற்றவாளியை சிபிஐ விசாரணை நடத்தி கைது செய்ய வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் சந்தேகப்படும் பலரை விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயிஷா கொலை வழக்கில் போலீசார் கொடுத்த அறிக்கையிலும்,  பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெவ்வேறு விதமான தகவல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி போலீசார் கொடுத்த அறிக்கையில் தலையில் காயமடைந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு சிபிஐ  நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் ஆயிஷா மீரா உடலை மறு பிரேத பரிசோதனை செய்வது தங்கள் மதத்திற்கு விரோதமானது என்று மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் நீதிமன்றத்தின் மூலம் ஆயிஷா மீரா பெற்றோர்களிடம் மறுபிரேத பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்ததையடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று 12 ஆண்டுகளுக்கு பிறகு குண்டூர் மாவட்டம், தெனாலி சென்சுபேட்டையில் உள்ள இடிகா மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆயிஷா மீரா உடலை தந்தை பாஷா முன்னிலையில் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர். தெனாலி தாசில்தார் ரவிபாபு முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த டிஎன்ஏ மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஆயிஷாவின் எலும்புகளை எடுத்து எந்தந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கான தடயங்களையும் சேகரித்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டாலும் தங்கள் மகளை கொலை செய்தவர்களுக்கு  உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என ஆயிஷாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: