×

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் பைக் ரேஸ்? முறியடிக்குமா போலீஸ்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புள்ள சாலைகளே தற்போதும் உள்ளன. இவையும்  ஆக்ரமிப்பால் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. ஆனால், வாகன பெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில் தற்போது வாலிபர்கள் அதிவேக பைக்குகளில் வலம்வரும் கலாசாரம் பெருகி வருகிறது. இந்த அதிவேக பைக்குகள் 350, 300, 250, 220, 200, 180 சிசி திறன்கொண்டவையாக உள்ளன. பல வாலிபர்கள் தங்கள் பைக் சைலன்ஸர்கள் மற்றும் ஏர்-பில்ட்டர்களை மாற்றியமைக்கின்றனர். இதனால் அதிக சப்தம் ஏற்படுவதோடு, பில்ட்டர் செய்யப்படாமல் வெளியேறும் அதிகளவு நச்சுப்புகை, காற்றையும்  மாசுபடுத்துகிறது.

பல நேரங்களில், நண்பர்களுக்குள் பெட் கட்டிவிட்டு  பைக் ரேஸும் நடத்துகின்றனர். சாலைகளில் 80, 100, 120 கி.மீ., என  அதி வேகமாக பைக்குகளில் பறக்கும் வாலிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால் சாலையில் செல்வோர் மிரண்டு அச்சமடைகின்றனர். குறிப்பாக, ஸ்கூட்டர் மற்றும் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 24ம் தேதி இரவும், புத்தாண்டை முன்னிட்டு  வரும் 31ம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ம் தேதி அதிகாலை, மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடந்த சில குறும்பு வாலிபர்கள் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

போலீசாருக்கு தெரிந்தால் தடுத்து விடுவார்கள் என எண்ணி இவர்கள் தற்போது ரகசியமாக திட்டமிட்டு வருகின்றனர். தங்கள் நண்பர்களுடன் ரகசியமாக ஆலோசனை செய்து, பைக் ரேஸ் நடத்த உள்ளதாக தெரிகிறது. எனவே இந்நாளில் போலீசார் விடியவிடிய வாகன சோதனை நடத்த வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில், வாகனங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக வேகமாக செல்வது சட்டப்படி குற்றம். அதுபோல செயல்படுபவர்கள் மற்றும் மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Christmas ,Bike Race ,New Year's Day Break , Christmas, New Year's Day, Bike Race? Break the police
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...