×

கீழ்வேளூர் அருகே சொத்து தகராறில் எரி களை கொல்லி ரசாயன மருந்து தெளித்து 3.3 ஏக்கர் சம்பா பயிர் அழிப்பு: ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது எஸ்பியிடம் புகார்

கீழ்வேளூர்: கீழ்வேளூர் அருகே அண்ணன் தம்பி சொத்து தகராறில் அண்ணன் பயிர் செய்த 3.3ஏக்கர் நெல் வயலில் எரி களைக்கொல்லியை தெளித்ததில் பயிர்கள் கருகியது. இதுகுறித்து நாகை எஸ்பியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி ஊராட்சி நுகத்தூரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் தேவூர் இரட்டைமதகடியை சேர்ந்த பக்கிரிமுகமது என்பவரின் பண்ணையில் பணியாற்றியதற்காக சுமார் 3.3 ஏக்கர் நிலம் குத்தகை சாகுபடிக்காக வழங்கியுள்ளார். இந்த நிலத்தில் பக்கிரிசாமி சுமார் 35 ஆண்டுகள் தொடர்ந்து சாகுபடி செய்து வந்த நிலையில் அந்த நிலத்தை அவருக்கே பக்கிரிமுகமது விற்பனை செய்ய முடிவு செய்தார். இந் நிலையில் பக்கிரிசாமி நிலத்திற்காக ஒரு தொகையை பக்கிரிமுகமதுவிடம் கொடுத்து விட்டு நிலத்தை தனது மருமகள் லூர்துமேரி பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்திரபதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பக்கிரிசாமியின் தம்பி வேணுகோபால் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தேவூரில் குடியிருந்து வருகிறார். வேணுகோபால், தனக்கும் நிலத்தில் பங்கு வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக தனது அண்ணன் பக்கிரிசாமியிடம் பிரச்னை செய்துள்ளார். இதனால் அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு 3.3 ஏக்கரில் பக்கிரிசாமி, சாகுபடி செய்திருந்த நிலையில் எரி களை கொல்லி மருந்து தெளித்து பயிர்கள் கருகியது. இதையடுத்து அப்போதே பக்கிரிசாமியின் மகன் பாண்டியன் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு அதே நிலத்தில் சி.ஆர்.1009 என்ற நெல் ரகத்தை சாகுபடி செய்து தற்போது 100 நாள் வயதுடைய பயிராக இருந்த நிலையில் கடந்த 10ம் தேதி காலை பக்கிரிசாமி வயலுக்கு சென்று பயிரை பார்த்துள்ளார். அப்போது வயல் முழுவதும் ஆள் நடந்து சென்று பயிர்கள் சாய்ந்த நிலையில் இருந்துள்ளது.

அப்போது பயிரில் ரசாயன மருந்து வாசனை அடித்துள்ளது. சந்தேகம் அடைந்த நிலையில் 13ம் தேதி வயலுக்கு சென்று பார்த்தபோது பயிர்கள் முழுமையாக கருகி இருந்தது. இதையடுத்து பக்கிரிசாமியின் மகன் பாண்டியன் விவசாய சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களுடன் சென்று நாகை எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், 10.12.2019 ம் தேதி இரவு 11.45 மணிக்கு நான் வீட்டில் இல்லாத போது தேவூரை சேர்ந்த வேணுகோபால் மனைவி ரெங்கநாயகி மற்றும் முகம் தெரியாத நபர்கள் என் வீட்டிற்கு வந்து என் மனைவியை வயல் பக்கம் வந்தால் உங்களை குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

அடியாட்களை வைத்துக்கொண்டு வேணுகோபால், அவரது மனைவியும் சேர்ந்து எனது நிலத்தை அபகரிக்க நினைக்கின்றார்கள். தற்போது கதிர் வரும் நிலையில் கடந்த 10ம் தேதி இரவு கூலி ஆட்களை வைத்து எரி களைக்கொல்லியை தெளித்து பயிர்களை அழித்து விட்டனர். எனக்கு நிலத்தை கொடுக்கா விட்டால் வருடா வருடம் இப்படிதான் செய்வேன் என்று எல்லோரிடமும் கூறிவருகிறனர். மேலும் பாண்டியன் குடும்பத்தை வேரோடு அழிக்காமல் விட மாட்டேன் என்று கூறுகிறார். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Samba ,dispute ,Keezhaloor ,teacher lodges ,SP , Kivevelur, Chemical Drug, Samba Crop Destruction
× RELATED வேதாரண்யம் பகுதியில் புயலுக்கு தப்பிய சம்பா பயிர் கனமழைக்கு அழுகி சேதம்