×

சர்க்கரை ஆலைகளில் அரவை நிறுத்தம்: அறுவடை செய்யாததால் பூத்து குலுங்கும் கரும்பு... விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சாக்கரை ஆலைகள் அரவை நிறுத்தப்பட்டுள்ளதால், சரியான நேரத்தில் கரும்பு வெட்டாததால், 100 ஏக்கரில் கரும்பு பயிர் பூத்து குலுங்குகிறது. கரும்பு எடை குறைந்துவிடும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பொம்மிடி, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் 8 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருவருட பயிரான கரும்பு, 10வது மாதத்தில் இருந்து அறுவடை செய்யப்படுகிறது. இதனிடையே, நடப்பாண்டு போதிய கரும்பு வரத்து இல்லாததால், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவ அரவை நிறுத்தப்பட்டுள்ளது.

அரூர் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்னும் இயங்கவில்லை. சர்க்கரை ஆலைகள் இயங்கததால், சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை வெட்டி அரவைக்கு கொண்டு செல்வது தாமதம் ஆகிறது. இந்த நிலையில், உரிய பருவத்தில் கரும்பு அறுவடை செய்யாததால், தர்மபுரி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100 ஏக்கரில் கரும்பு பயிர் பூத்து குலுங்குகிறது. கரும்பு பூத்தால் கரும்புச்சாறு குறைந்து எடையும் குறையும். கரும்பின் தரம் குறையும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை சரியான நேரத்தில் இயக்காததால், கரும்பு வெட்டாமல் நாட்கள் தள்ளி போய் கொண்டிருக்கிறது. பனிப்பொழிவு, வெயில், மழை என சீதோஷ்ணநிலை மாற்றத்தால் கரும்பு பயிர் தற்போது பூத்து குலுங்குகிறது. இதனால், கரும்பின் எடை குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : Half stop , Sugar mill, blooming cane
× RELATED கோயில் திருவிழாவை முன்னிட்டு...