வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு: ஜன. 15-ல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தகவல்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின்படி,

கடந்த 1ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ‘பாஸ்டேக்’ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அமலாவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், கடந்த 1ம் தேதியில் இருந்து கட்டாயமாக்க அறிவிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகளின் கோரிக்கையால் டிச. 15ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில சுங்கசாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு கொண்டு வந்திருந்தாலும்கூட, இன்று (டிச. 15) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் நிலையில், இதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘பாஸ்டேக்’ முறைக்கு பெரும்பாலான வாகனங்கள் மாறினாலும் போக்குவரத்து நெரிசல் அப்படியேதான் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்னைகளை மத்திய அரசும், சுங்கச்சாவடி ஊழியர்களும் சரிசெய்தால் மட்டுமே ‘பாஸ்டேக்’ திட்டம் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. இதனிடையே பாஸ் டேக் சிப்புகள் சந்தையில் கிடைப்பதில் தட்டுப்பாடு நீடிப்பதால் இத்திட்டத்தை மேலும் ஒருமாத காலம் ஒத்தி வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. பாஸ்டேக் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனமும் அரசிடம் மேலும் 6 வார கால அவகாசம் கோரியுள்ளது.

இந்நிலையில் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்த நிலையில் டேக் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் பொருத்த வாகன உரிமையாளர்களுக்கு மேலும் ஒருமாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டம் ஜனவரி 15ம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: