திண்டுக்கல்லை அடுத்து சேலத்தில் கைவரிசை போலி ஆதார் அட்டைகளுடன் கும்பல் சிக்கியது : கம்ப்யூட்டர், பான் கார்டுகள் பறிமுதல்

சேலம்:  சேலம் அழகாபுரத்தில் உள்ள லாட்ஜில் சந்தேகத்திற்கிடமான கும்பல் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த லாட்ஜூக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே அறையில் இருந்த 7 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 32 ஆதார் அட்டைகள், 7 பான் கார்டு, 7 டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் ஒன்றையும் வைத்திருந்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டைகள் அனைத்தும் போலி என தெரிய வந்தது. இக்கும்பலுக்கு திண்டுக்கல் வடமதுரை தென்னாம்பட்டியை சேர்ந்த பட்டதாரியான கண்ணன்(28) என்பவர் தலைவனாக இருந்துள்ளார். மேலும் வேடசந்தூர் கொம்பேறிப்பட்டி வரதராஜபெருமாள்(33), வடமதுரை அண்ணாநகர் அருண்(22), வடமதுரை செங்குளத்துப்பட்டி ராமு(23), தென்னாம்பட்டி சரவணகுமார்(22), மொட்டனாம்பட்டி சிறுநாயக்கன்பட்டி பன்னீர்செல்வம்(34), திருச்சி மணப்பாறை முத்தப்படையான்பட்டி மதுபாலன்(23) என்ற அந்த 7 பேரையும் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திண்டுக்கல்லை சேர்ந்த இவர்கள், கடனுக்கு டிவி, பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு செல்வார்கள். முன்பணமாக 2500 கொடுத்து விட்டு ₹50 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்களை எடுத்துவிட்டு, வீட்டு முகவரி என போலியாக தயாரித்து வைத்திருக்கும் ஆதார் கார்டுகளை கொடுத்து ஏமாற்றி செல்வார்கள். ஆதார் அட்டையை போலியாக இவர்களே தயாரித்து வந்துள்ளனர். இதற்காக கம்ப்யூட்டரில் வடிவமைத்து பிரிண்ட் எடுத்து லேமினேசன் செய்து கொள்வார்கள். திண்டுக்கல்லில் இதுபோல மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சேலத்திலும் இதுபோன்று மோசடியில் ஈடுபட திட்டமிட்ட நேரத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.  இதுகுறித்து மாநகர துணை கமிஷனர் செந்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘சேலத்தில் பிடிபட்டுள்ள கும்பல் திண்டுக்கல்லில் ₹30 லட்சம் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இங்கு மோசடியில் ஈடுபட திட்டமிட்டபோது பிடிபட்டுள்ளனர்’ என்றார். இவர்கள் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: