மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடக்கம் : 27 யானைகள் பங்கேற்கின்றன

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. இதில், 27 யானைகள் பங்கேற்கின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் மற்றும்  மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், நீலகிரி மாவட்டம் முதுமலை  தெப்பக்காட்டில் நடத்தப்பட்ட இம்முகாம், கடந்த 2012ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரம் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழக அமைச்சர்கள் இம்முகாமை தொடங்கி வைக்கின்றனர். இம்முகாமில், தமிழகம் முழுவதும் இருந்து 27 யானைகள் பங்கேற்கின்றன. முகாமில் நிர்வாக அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம்,  பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகை என அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டன. யானைகள்  நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை குளிக்க வைக்க குளியல் மேடை, ஷவர்  மேடை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் நடமாட்டத்தை  கண்காணிக்க முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம், மொத்தம் 48 நாட்கள் நடக்கிறது. 10 யானைகள் வந்தன: முகாமுக்கு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன. முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலியதாவும், 2வதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் யானை கோதையும், 3வதாக பழனி தண்டாயுதபாணி கோயில் யானை கஸ்தூரியும் என அடுத்தடுத்து நேற்று மாலை வரையில் 10 யானைகள் வந்துள்ளன. இவற்றில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலியதா, முகாமுக்கு வந்ததும் உடலில் சேற்று மண்னை எடுத்துப் பூசி, மண்ணில் உருண்டு விளையாடியது. இதுபற்றி பாகன் விமல்குமார் கூறுகையில், ‘இதுபோன்று விளையாடுவதன் மூலமாக யானைகள் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளும்’ என்று கூறினார்.

Related Stories: