166 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை

பெர்த்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில் (பகல்/இரவு), நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பெர்த் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது. மார்னஸ் லாபுஷேன் அதிகபட்சமாக 143 ரன் விளாசினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்திருந்தது. டெய்லர் (66 ரன்), வாட்லிங் (0) இருவரும் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். வாட்லிங் 8 ரன்னில் வெளியேற, டெய்லர் 80 ரன் எடுத்து (134 பந்து, 9 பவுண்டரி) லயன் சுழலில் ஸ்மித் வசம் பிடிபட்டார். கிராண்ட்ஹோம் 23 ரன் எடுக்க, சான்ட்னர் 2, சவுத்தீ 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.  நியூசிலாந்து அணி 55.2 ஓவரில் 166 ரன்னுக்கு சுருண்டது. ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 5, லயன் 2, ஹேசல்வுட், கம்மின்ஸ், லாபுஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 250 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்துள்ளது. வார்னர் 19, பர்ன்ஸ் 53, லாபுஷேன் 50, ஸ்மித் 16, ஹெட் 5, டிம் பெய்ன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். மேத்யூ வேடு 8, கம்மின்ஸ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 4, வேக்னர் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. அணி கை வசம் 4 விக்கெட் இருக்க 417 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: