×

இந்தியாவில் மத சுதந்திரம் காக்கப்படுமா? : அமெரிக்கா கவலை

வாஷிங்டன் : ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தினால் இந்தியாவில் மத சுதந்திரம் காக்கப்படுமா?’ என்று அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்தித்து பேசும் 2வது `2+2’ மாநாடு, வரும் 18ம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு, பாதுகாப்பு, ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உ்ள்ளது. இந்நிலையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியாவில் மத சுதந்திரம் காக்கப்படுமா?’ என்று சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் சாம் பிரவுன்பேக் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், இந்தியாவின் மிகப் பெரிய வலிமை அதன் அரசியலமைப்பு. ஜனநாயகத்தை பின்பற்றுபவர்கள் என்ற முறையில் இந்திய அரசை மதிக்கிறோம். அதே  நேரம், குடியுரிமை திருத்த சட்டம், இந்தியாவில் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துமோ என்பது கவலை அடைய செய்கிறது. மத சுதந்திரம் உள்ளிட்ட அரசியலமைப்பின் அனைத்து கடமைகளும், பொறுப்புகளும் முழு அர்ப்பணிப்புடன் இந்தியாவில் பின்பற்றப்படும் என அமெரிக்கா நம்புகிறது,’ என்று கூறியுள்ளார்.

‘அசாம் செல்ல வேண்டாம்’


அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், `இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம், வன்முறை நடந்து வருவதால், அங்குள்ள சில பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. எனவே, வடகிழக்கு மாநிலங்களுக்கு அமெரிக்கர்கள்  சுற்றுலா செல்ல வேண்டாம். மேலும், ஏற்கனவே அங்கு சென்றுள்ள அமெரிக்கர்கள், அதிகமாக வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.  இதேபோல் இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகியவை தங்கள் நாட்டு மக்களுக்கு அசாம் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளன.

Tags : India ,America , religious freedom , protected in India, America is concerned
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!