×

எந்த தவறும் செய்யாதபோது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது நியாயமற்றது : அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை

வாஷிங்டன்: ‘‘நான் எந்த தவறும் செய்யாத போது, எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது நியாயமற்றது,’’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால், அவரது பதவியைப் பறிப்பதற்கான பதவிநீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு நாடாளுமன்ற சட்டக்குழு நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 435 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அங்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், தீர்மானம் நிறைவேறி 100 எம்பி.க்களை கொண்ட செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். செனட் சபையில், ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 பேர் உள்ளனர். கிறிஸ்துமசுக்கு முன்பாகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், ‘நான் எந்த தவறும் செய்யாத போது எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது நியாயமற்றது. ஜனநாயக கட்சியால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் இந்த நாட்டுக்கே கேடானவர்கள்,’ என வேதனையில் கொந்தளித்துள்ளார். முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘‘பதவிநீக்க தீர்மானம் ஒரு ஏமாற்று வேலை. போலியானது. அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டே போதே இதுபோன்ற வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. ஒபாமாவை விட நான் நன்றாகவே ஆட்சி செய்துள்ளேன். எனவே, நாட்டுக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்கக் கூடாது,’’ என்றார்.

Tags : Trump ,US , motion to dismiss, unreasonable, US President Trump tormented
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...