குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் கத்தியால் குத்தி பெயின்டர் கொலை : வாலிபர் கைது

பெரம்பூர்: திரு.வி.க. நகர் பகுதியில் மது அருந்த  பணம் கேட்டு மிரட்டியதால் கத்தியால் குத்தி பெயின்டர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் சத்ய சாய் நகரை சேர்ந்தவர் முருகன் (எ) சுரேஷ்குமார் (43), பெயின்டர். மது போதைக்கு அடிமையான இவர், குடும்பத்தை விட்டு பிரிந்து,  திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம்  இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,  இவரை சரமாரி தாக்கி, கத்தியால் குத்திவிட்டு விட்டு தப்பியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த திரு.வி.க. நகர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், சுரேஷ்குமாரை கொலை செய்த குற்றவாளி திரு.வி.க. நகர்  வெற்றி நகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ சசிகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குற்றவாளியை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதி கோபாலபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்பதும், தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பெயின்டர்  சுரேஷ்குமார்  அடிக்கடி அப்பகுதியில் உள்ள இளைஞர்களை  மிரட்டி குடிப்பதற்கு பணம் கேட்பதும், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமாரிடம்  குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்குமாரை மிரட்டி உள்ளார். அப்போது, சந்தோஷ்குமார் அந்த குத்தியை பிடிங்கி, சுரேஷ்குமாரை குத்திவிட்டு தப்பினார். மயங்கி விழுந்த சுரேஷ்குமார் அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Painter , Painter killed, with knife ,threatening, pay for drinking
× RELATED பொங்கல் பரிசு தொகையில்...