மத்திய அரசு 7,500 கோடி நிலுவை தொகை தர மறுப்பு : தமிழக வணிகவரித்துறை ஆணையர் அவசர கடிதம்

சென்னை: மத்திய அரசு தர வேண்டிய 7,500 கோடி நிலுவை தொகை தர மறுத்து விட்ட நிலையில், உடனடியாக அத்தொகையை விடுவிக்கக் கோரி தமிழக வணிகவரித்துறை ஆணையர் மத்திய அரசுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். மேலும், இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் சேவை வரி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதுவரை சரக்குகளுக்கு மட்டுமே வரி வசூலித்து வந்த தமிழக அரசு சேவை வரிக்கும் சேர்த்து வசூலித்து வருகிறது. இதில், வரி வருவாயை மத்திய, மாநில அரசுகள் பிரித்து கொள்கிறது. இந்த ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்தனர். ஆனால், ஆல்கஹால் மற்றும் எரிபொருகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் தற்போது வரை தமிழக அரசை ஓரளவு காப்பாற்றி வருகிறது. இருப்பினும் வருவாய் இலக்கை அடைய முடியாமல் வணிகவரித்துறை தவித்து வருகிறது. இந்நிலையில், வரி வருவாய் இலக்கை சமாளிக்க மத்திய அரசும் 5 ஆண்டுகளுக்கு மானியம் தரும் என்று உத்தரவாதம் அளித்து இருந்தது. ஆனால், மத்திய அரசு அளித்த உத்தரவாதப்படி 7,500 கோடி தமிழக அரசுக்கு இழப்பு தொகை தர வேண்டும் என்று கூறியிருந்தது.

ஆனால், மத்திய அரசு இந்த தொகையை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வணிகவரித்துறை ஆணையர் சோமநாதன் மத்திய வருவாய்த்துறைக்கும், ஜிஎஸ்டி ஆணையத்துக்கும் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது, 5 ஆண்டுகளுக்கு மானியம் தரப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நிலுவையில் உள்ள தொகையை தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இக்கூட்டத்திலும் நிலுவை தொகையை தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அழுத்தம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது, தற்போது எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி என வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில், ஐஜிஎஸ்டிக்கு கிடைக்கும் வரி வருவாயை மத்திய அரசுக்கு மாநில அரசு அளித்து விடுகிறது. மேலும், சுங்கத்துறை, கலால்துறை மூலம் வசூலிக்கப்படும் தொகை மத்திய அரசுக்கு சென்று விடுகிறது. இதில், மாநிலத்துக்கான வரிகளை சேர்த்து மத்திய அரசு வசூலித்து விடுகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு தான் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. ஆனால், மாநில அரசுக்கு குறைவான வருவாய் தான் வருகிறது. எனவே, தான் மாநில அரசு இழப்பு தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: